ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் மிக இள வயது வீராங்கனைகளில் ஒருவராக இருக்கிறார் ஜெர்மனியை சேர்ந்த லில்லி ஸ்டோபாசியஸ்
பார்க்க பார்க்க சுவாரசியம் பீறிடும் ஸ்கேட் போர்டிங் விளையாட்டு முதன்முறையாக ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருக்கிறது. ஆடவர் மற்றும் மகளிருக்கு பார்க், ஸ்ட்ரீட் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ளும் 80 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளில் ஒருவராக இருக்கிறார் ஜெர்மனியை சேர்ந்த 13 வயது பாலகி லில்லி ஸ்டோபாசியஸ்.
மகளிர் பார்க் பிரிவில் பங்கேற்கிறார் அவர். ஜெர்மனியின் வுஸ்டர்மார்க் பகுதியில் அவரது தந்தை ஆலிவர் ஸ்டோபாசியஸின் பயிற்சியின் கீழ் திறமையை மெரூகேற்றி வருகிறார் இந்தச் சிறுமி. ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக பயிற்சியெடுத்து வருவதாகவும், ஒலிம்பிக் களத்தை நினைக்கையில் சற்று பதற்றமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஸ்டோபாசியஸ்.
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாவது தமது லட்சியக்கனவாக இருந்தாகவும், அதற்கு மேல் என்னிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்காதீர்கள் என குழந்தைத்தனம் மாறாமல் கூறுகிறார் லில்லி ஸ்டோபாசியஸ். ஒலிம்பிக் களம் செல்லும் தம் மகளுக்கு அனைத்து மக்களும் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார் தந்தை. இந்த இளம் ஸ்கேட்போர்டிங் தேவதையை வரவேற்க ஒலிம்பிக் களம் தயாராக உள்ளது.