இந்திய தடகள வீராங்கனை ஜோதி யார்ரஜ்ஜி, சர்வதேச தடகளப் போட்டியில் 2வது முறையாக தேசிய சாதனை படைத்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த 22 வயதான தடை தாண்டும் வீராங்கனை ஜோதி யார்ரஜ்ஜி, கடந்த 10ஆம் தேதி சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் தேசிய சாதனை படைத்தார். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 13 புள்ளி 23 விநாடிகளில் அவர் இலக்கை கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் லபரோ சர்வதேச தடகளப் போட்டியிலும் அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற அவர், 13 புள்ளி 11 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார். இந்த தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிரேஸ்ஸன் அமல்தாஸ் என்பவர், ஆடவர் ஜூனியர் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 13 புள்ளி 91 வினாடிகளில் இலக்கை அடைத்து முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.