விளையாட்டு

”நீங்களும் அனுபவிப்பீர்கள்” சூர்யகுமாருக்கு அறிவுரை வழங்கிய கோலி! மைதானத்தில் கலகல பேட்டி

”நீங்களும் அனுபவிப்பீர்கள்” சூர்யகுமாருக்கு அறிவுரை வழங்கிய கோலி! மைதானத்தில் கலகல பேட்டி

PT

“தாம் பழைய நிலைக்கு திரும்பியது குறித்து, சக வீரரான சூர்யகுமார் யாதவிடம் விராட் கோலி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கவுகாத்தியில் நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் கேப்டன் ரோகித், சுப்மான் கில் ஆகியோர் அரைசதம் அடிக்க, முன்னாள் கேப்டன் விராட் கோலி 113 ரன்கள் எடுத்து அசத்தினார். தவிர இந்தச் சதம் மூலம் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார்.

இதையடுத்து, விராட் கோலி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக அவரது ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இந்தியாவின் 360 வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், விராட் கோலியிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது, ”இடையில் சரிந்திருந்த உங்களது பேட்டிங்கை நீங்கள் மீண்டும் கொண்டுவந்தது எப்படி” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள விராட் கோலி, “என் பேட்டிங்கில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. எப்போதும்போலவே விளையாடுகிறேன். எனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறேன். அதன்படிதான் எப்போதும் செயல்படுகிறேன். நாம் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது, அதன்மீது வைத்திருக்கும் ஆர்வமும் திறமையும் நம்மைவிட்டு எங்கும் செல்லாது. எதை நினைத்தும் குழப்பிக்கொள்ளாமல் அச்சமின்றி விளையாடினாலே போதும், எல்லாம் சாத்தியம்தான்.

ஒவ்வொரு போட்டியையும் தனது கடைசிப் போட்டி என்பதைப்போல நினைத்து விளையாடுங்கள். நான் வாழ்நாள் முழுவதும் விளையாடப்போவதில்லை. எனவே, விளையாடும் காலத்தை நினைத்து உற்சாகமாக விளையாடுகிறேன். நிறைய போட்டிகளில் ஆடும்போது நான் சந்தித்த பிரச்சினைகளை நீங்களும் (சூர்யகுமார் யாதவ்) எதிர்கொள்வீர்கள். ரசிகர்கள் உங்கள் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள். அதாவது, சூர்யகுமார் விளையாடச் சென்றால் ஏதேனும் ஒன்றைச் செய்து அசத்துவார் என எதிர்பார்ப்பார்கள்.

அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோதுதான் அழுத்தங்களும், வருத்தங்களும் ஏற்படும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் விளையாடினேன். ஆனால் கிரிக்கெட்டின் தன்மை அனுமதிக்கவில்லை. எனவேதான் எனது ஆட்ட முறையை முற்றிலுமாக மாற்றினேன். என்னுடைய உண்மையான ஆட்டம் எதுவென்பதை அறிந்து அந்த வழியில் மீண்டும் பயணித்தேன். மோசமாக ஆடுகிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கம்பேக் தர முடியும். அதேநேரத்தில், நாம் சரியாகத்தான் விளையாடுகிறோம் என்று எண்ணினால், சிக்கலில் மாட்டிக்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ், 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து டி20யில் 3வது சதம் அடித்து சாதனை படைத்திருந்தபோதிலும், அவர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்