“அடுத்த ஆண்டு எங்களுக்காக நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” என்று சென்னையின் இளம் பவுலர் குட்டி "மலிங்கா" குறித்து தோனி பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2022 சீசன் மறக்க வேண்டிய சீசனாக அமைந்து விட்டது. நான்கு முறை சாம்பியனான சென்னை அணி 10 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மொத்த சீசனிலும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக முதிர்ச்சியடைவார்கள் என எதிர்பார்த்த மகேந்திர சிங் தோனியின் குரலில் நம்பிக்கை வெளிப்பட்டது. முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரனா மற்றும் பிரசாந்த் சோலங்கி போன்றவர்களின் உற்சாகமான செயல்திறன், அடுத்த ஆண்டு வலுவான மறுபிரவேசம் என்ற நம்பிக்கையை அளித்திருப்பதாக தோனி கூறினார்.
“சென்னை வீரர்கள் ஆட்டம் எப்படி முடிந்தாலும், அவர்கள் அதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள். அதில் மிகப் பெரிய உதாரணங்களில் ஒன்று முகேஷ். அவர் எல்லா கேம்களிலும் விளையாடினார், ஆனால் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை அவர் எப்படி முன்னேறினார் என்று பார்ப்பது சுவாரஸ்யமானது. அவர் டெத் ஓவர்களின் போது சிறப்பாக பந்து வீச முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வீரர்களிடமிருந்து விரும்புகிறோம். அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றவுடன், அடுத்த ஆண்டு முதல் மீண்டும் புதிதாக தொடங்க வேண்டாம். இளைஞர்களிடமிருந்து அதுதான் தேவை, அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
எங்கள் மலிங்கா (மதீஷா பத்திரனா), அவர் உண்மையிலேயே நல்லவர். அவரைத் தேர்ந்தெடுப்பது கடினம், அடுத்த ஆண்டு அவர் எங்களுக்கு பெரிய அளவில் பங்களிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார் தோனி.