வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார் இந்திய இளம் வீரர் இஷான் கிஷான்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முன்னதாக தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி முதல் 2 போட்டிகளையும் வென்று ஏற்கனவே தொடரை வென்று விட்டது. 2ஆவது போட்டியில் ஏற்பட்ட காயம் காரணாமாக கேப்டன் ரோகித் சர்மா விலக, ஓபனராக களமிறங்கும் வாய்ப்பு இஷான் கிஷனிற்கு கிடைத்தது. கேல் ராகுல் இந்திய கேப்டனாகா இந்திய போட்டியில் செயல்பட்டார்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இஷான் கிஷான், வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். சதமடித்ததற்கு பிறகு அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பிய இஷான் கிஷான் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை கிரவுண்டின் நாலாபுறமும் சிதறவிட 24 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என விளாசி 126 பந்துகளில் இரட்டை சதமடித்து இமாலய சாதனையை படைத்தார். 131 பந்துகளில் 210 ரன்கள் இருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். மறுபுறம் விராட் கோலியும் சதமடிக்க 50 ஓவர் முடிவில் 409 ரன்களை குவித்தது இந்திய அணி.
ஒரே போட்டியில் இஷான் கிஷன் நிகழ்த்திய சாதனைகள்!
* முதல் சதம் அடித்ததை இரட்டை சதமாக மாற்றிய முதல் வீரர்
* கிறிஸ் கெயிலின் 138 பந்துகளுக்கு 200 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து, 126 பந்துகளில் இரட்டை சதமடித்து அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக மாறினார்.
* இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர். 24 வயதில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
*இரட்டை சதமடித்த 4ஆவது இந்திய வீரர், 7ஆவது சர்வதேச வீரர்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசியிருக்கும் இஷான் கிஷன், “ உலக ஜாம்பவான்களின் பெயர்களுக்கிடையில் எனது பெயரை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. எனது கவனம் எல்லாம் பந்தை சரியாக கவனித்து எனது ஷாட்டிற்கு செல்வதில் தான் இருந்தது. நான் 90+ ரன்களில் இருந்தபோது நான் என் முதல் சதத்திற்கு சிக்சருக்கு செல்ல நினைத்தேன். ஆனால் விராட் பாய் உங்கள் முதல் சதத்தை சிங்கிளில் பெறுங்கள் என்று என் உணர்ச்சிபெருக்கை கட்டுப்படுத்தினார். நான் அவுட்டாகி வெளியேறும் போது 15 ஓவர்கள் மீதமிருந்தது, அப்போது நிலைத்திருந்தால் 300 ரன்களுக்கும் சென்று இருக்கலாம் என்று நினைத்தேன்” என்று கூறினார்.
மேலும் ”முன்னதாக சூரியா பாய் இடம் பேசும் போது, அவர் நீங்கள் பந்தை நன்றாக பார்க்கிறீர்கள் என்று கூறினார். நான் பெரிதாக என்மீது அழுத்தத்தை அதிகரிக்க அனுமதிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்” என்று தெரிவித்தார்.
இஷான் கிஷன் குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் ரவி சாஸ்திரி, ”இளமையின் உற்சாகமான ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு இளைஞனாக, காளையை கொம்புகளால் பிடித்து, இரு கைகளாலும் உங்கள் வாய்ப்பைப் பெறுவது இப்படித்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
கேப்டன் ரோகித் சர்மா விலகிய நிலையில் தான் இஷான் கிஷானிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இஷான் கிஷன் அணித்தேர்வர்களின் அறிவை சோதிக்கும் வகையில் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.