விளையாட்டு

“விராட் கோலி சாதாரண ஆள் இல்ல”: ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் கில்லெஸ்பி!

webteam

சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில், விராட்கோலியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகம் உழைக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார். கோலியை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் ​எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சு தன்மையை ரசிக்கும் விராட் கோலி, பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு ருசி பார்த்துவிடுவார். இதுவரை இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய 23 சர்வதேச ஒருநாள் போட்டியில் 1002 ரன்களை கடந்துள்ளார். ஆஸ்தி‍ரேலிய வீரர்கள் தங்களது பேச்சுதிற‌னை குறைத்துக்கொண்டு அவர்களது திற‌மையை மைதானத்தில் காண்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்ததால் கோலி தனது சிறப்புகளை இழந்து வந்தார். ஆனால் அதற்கடுத்த ஆட்டங்களில் தனது அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் இனி வரும் ஆட்டங்களில் மற்ற வீரர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு சிறந்த பந்து வீச்சு மூலம் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்திய கேப்டன் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். பேட்டிங் செய்யும்போது மைதானத்தின் அமைப்புக்கு ஏற்றார்போல் விளையாடுவது அவரது சிறப்பு. இதனால் அவரை அவுட் செய்வது மிக எளிய காரியம் அல்ல. இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கண்டிப்பாக நல்ல பயிற்சி எடுக்க வேண்டும் என்றும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கோலியை அவுட் செய்வது ஒரு சாதனையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த வீரரை அவுட் செய்ய ஒரு மிகச்சிறந்த பந்து வீசினால் மட்டுமே முடியும் எனவும், கோலியை அவுட் செய்து விட்டாலே இந்தியாவை எளிதில் வெற்றி கொள்ளலாம் எனவும் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.