விளையாட்டு

தோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா ? முன்னாள் வீரர்கள் காட்டம்

தோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா ? முன்னாள் வீரர்கள் காட்டம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். மேலும் ஒரு இன்னிங்ஸ் 159 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸில் படுதோல்வி அடைந்தது, இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

விரேந்திர சேவாக்

டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த மாதிரியான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரே மாதிரியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இதுபோன்ற நேரங்களில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் போராடாமல் இந்தியா முழுமையாக சரணடைந்தது வேதனையளிக்கிறது. ஆனால் இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வருவார்கள் என நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

வி.வி.எஸ்.லக்ஷ்மண் 

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ரன்களை அடித்து சாதனைப்படைத்தவர். முக்கியமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை ஓடஓட விரட்டியவர் முன்னாள் பேட்ஸ்மேன் லக்ஷ்மன். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "மோசமான நிலையில் உள்ளோம். எதிரணயின் வியூகங்களை கவனிக்க தவறிவிட்டோம். ஆனால் கொஞ்சம்கூட போராடாமல் தோல்வியடைந்ததுதான் வேதனையாக உள்ளது. இந்த பாடத்தை கற்றுக் கொண்டு, அடுத்த ஆட்டங்களிலாவது சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என விமர்சித்துள்ளார்.

பிஷன் சிங் பேடி

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சுழற்பந்து லெஜெண்ட். இடது கை சுழற்பந்து வீச்சின் பிதாமகன் பிஷன் சிங் பேடி. இவர் அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணி குறித்து வறுத்தெடுப்பதுண்டு. லார்ட்ஸ் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "மிகவும் மோசமான ஆட்டம். பிரச்னை என்ன, அதற்கு தீர்வு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இந்திய பேட்டிங் வரிசை முழுமையாக தோல்வியடைந்தது வேதனை அளிக்கிறது. இந்திய வீரர்களிடம் ஒரு கோபமும் பழி தீர்க்கும் உணர்ச்சி கூட இல்லை" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் பேடி.