விளையாட்டு

“சச்சினை ஸ்லெட்ஜிங் செய்ய போய்..நானே அதில் மாட்டிக்கொண்டேன்..”-பாக். தலைமை பயிற்சியாளர்

“சச்சினை ஸ்லெட்ஜிங் செய்ய போய்..நானே அதில் மாட்டிக்கொண்டேன்..”-பாக். தலைமை பயிற்சியாளர்

Rishan Vengai

நான் சச்சின் இடம் சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினேன், அதற்கு அவர் என்னிடம் வந்து பேசிவிட்டு போய் விளையாடினார், ஆனால் பின்னர் நான் எப்படி அவரின் வலைக்குள் சிக்கினேன் என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை என தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரான சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

காலத்திற்கும் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் பல புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களுடன் மோதலை சந்தித்துள்ளார். அப்படி உலகத்தின் சாலச்சிறந்த பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படும் கிளென் மெக்ராத், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், ஆலன் டொனால்ட், முத்தையா முரளிதரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் அக்தர் போன்றவர்களுடன், சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மிகப்பெரிய ரைவல்ரியே இருந்துள்ளது. அவர்களுடன் எல்லாம் சண்டையிட்டு, ஒருவருக்கு ஒருவர் வார்த்தை போர் நடத்திய பின்னர், அவர்களின் பந்துவீச்சை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் சச்சின் அனுப்பும் போட்டிகளை நினைத்தாலே, அது உங்கள் கண்களுக்கு முன்னால் பிரகாசமாக வந்துநின்று தற்போதும் ஒளிரும்.

அப்படி இருப்பினும், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான சக்லைன் முஷ்டாக்கிற்கும், டெண்டுல்கருக்கும் இடையேயான மோதல் என்பது மிகவும் குறைவாகவே கேள்விப்பட்ட ஒன்றாக இருக்கும். சிலருக்கு அப்படி எல்லாம் சச்சினுக்கு ரைவல்ரி இருந்ததா என்ற கேள்வி எல்லாம் எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களான சக்லைன், லீ, அப்துல் ரசாக் போன்ற பவுலர்களை போல டெண்டுல்கரை சக்லைன் அதிகம் வெளியேற்றியிருக்கவில்லை. ஆனால் சச்சினுக்கு எதிராக சக்லைன் முக்கியமான சில போட்டிகளில் அவரை வெளியேற்றி அவருடைய சதி திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். 1999ஆம் ஆண்டு சென்னை டெஸ்டில் சக்லைன் வீசிய தூஸ்ரா பந்தானது, சச்சினுக்கும் இந்தியாவுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியது என்றால் பொய் என்று சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரரும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துவரும் சக்லைன் முஷ்டாக், சச்சின் உடனான ஒரு மோதல் குறித்து தற்போது பேசியுள்ளார். அந்த மோதலில் எவ்வாறு தான் சச்சினின் வலையில் சிக்கிக்கொண்டு அடிவாங்கினேன் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சச்சின்!

சச்சின் உடனான மோதல் குறித்து பேசியுள்ள அவர், ” அப்போது தான் நான் அணிக்குள்ளேயே வந்திருந்தேன். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமான போட்டி கனடாவில் நடந்தது. அந்த போட்டிக்கு முன்னர் நான் இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் விளையாடிவிட்டு வந்திருந்தேன். என்னுடைய பந்துவிச்சு உலகில் நான் பறந்துகொண்டிருந்த காலம் அது. சச்சினுக்கு எதிராக பந்துவீசிய போது நான் அவரை நோக்கி சில மோசமான வார்த்தைகளை பேசினேன். அப்போது எனக்கு அருகே வந்த அவர், சகி நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லும் நபராக நீங்கள் இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை, நீங்கள் மிகவும் ஒழுக்கமான நபர் என்று நான் நினைத்தேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

என்னை சுற்றவிட்டுவிட்டு அவர் தன் இருப்பை இன்னும் பலப்படுத்தி கொண்டார்!

அவர் அதை மிகவும் அழகாகச் சொன்னார். நம்புங்கள் அடுத்த 4 ஓவர்களுக்கு அவருடைய வார்த்தைகள் என்னைத் தாக்கி கொண்டே இருந்தன. அவர் சொன்னதை என்னால் எளிதாக கடந்துபோக இயலவில்லை. ஆனால் ஏன் அவர் அவ்வாறு சொல்லிவிட்டு போனார் என்று நான் உணருவதற்கு முன்பாகவே, அவர் தனது வேலையைச் சரியாக செய்துவிட்டார். ஆம் அவர் நன்றாக செட்டில் ஆகிவிட்டார். அதற்கு பிறகு நான் போட்ட ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை விரட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் என்னால் எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது!

பின்னர் தான் எனக்கு புரிந்தது, அது அவருடைய யுக்தி என்று. யாராவது உங்களிடம் நன்றாகப் பேசினால், நீங்கள் அதைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குவீர்கள். உண்மையாகவே அவர் விரித்த வலையில் நான் சிக்கிக்கொண்டேன், நான் அந்த சிந்தனையிலேயே இருந்தபோது, அடுத்த 4-5 ஓவர்களில் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது அடித்துகொண்டே இருந்தார். இறுதியாக அவர் இறங்கி வந்து அடுத்தடுத்து இரண்டு அற்புதமான ஷாட்களை ஆடினார். அது என் முகத்தில் அறைந்ததை போல நான் உணர்ந்தேன் என்று முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் கூறினார்.

நீங்கள் புத்திசாலி என்று அவரிடமே கூறினேன்..அவர் என்னை பார்த்து சிரித்தார்!

அதற்கு பிறகு நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் என்னை பார்த்து சிரித்தார், நான் அவரிடம் நீங்க ரொம்ப புத்திசாலி என்று கூறினேன். அவர் என்னை எப்படி கையாண்டார் பாருங்கள், நான் அவர் பேட்டால் மட்டும் மாட்டிக்கொள்ளவில்லை, அவருடைய வார்த்தைகளிலும் மாட்டிக்கொண்டேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்.