விளையாட்டு

”டாப் கிளாஸ் பவுலர்கள்-டர்னிங் & சீமிங் பிட்ச்கள்” எதுவும் சூரியகுமாரை பாதிக்காது - கைஃப்

”டாப் கிளாஸ் பவுலர்கள்-டர்னிங் & சீமிங் பிட்ச்கள்” எதுவும் சூரியகுமாரை பாதிக்காது - கைஃப்

webteam

நம்பர் 4 இடத்திலிருந்து சூரியகுமார் யாதவை சில காலத்திற்கு அகற்ற முடியாது என்று இந்தியா முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் முதல் டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் டி20 பேட்டர் தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸ்ஸாமை பின்னுக்கு தள்ளி 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 100 ரன்கள் அடித்து தனது அதிரடி பேட்டிங்கை உலகறியச்செய்த சூரியகுமார் யாதவ் தொடர்ந்து பல ரெக்கார்டுகளை டி20 வடிவத்தில் படைத்து வருகிறார். ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி 732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 2018ல் 689 ரன்கள், விராட் கோலி 2016ல் 641 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

மேலும் ஒரு வருட டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் 45 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார் சூரியகுமார் யாதவ். முன்னதாக 2021ல் முகமது ரிஷ்வான் அடித்த 41 சிக்சர்கள் முதலிடத்தில் இருந்தது.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் கைஃப், ”டாப் கிளாஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது சுழற்பந்து வீச்சாளர்கள், டர்னிங் அல்லது சீமிங் பிட்ச்கள், கடினமான போட்டி சூழ்நிலை என எதுவும் சூர்யாவைத் தொந்தரவு செய்யவில்லை. அவரால் ஆரஞ்சு தொப்பியை வெல்ல முடியாமல் போனாலும், MoM அவார்டை வெல்லமுடியாமல் போனாலும், நிச்சயம் அவர் உங்களுக்கு போட்டிகளை வென்றுத்தருவார். நம்பர் 4 இடத்தை அவரிடமிருந்து வெகு காலத்திற்கு அகற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.