விளையாட்டு

நாட்டுக்கு பெரிய தலைக்குனிவு: ஸ்மித்தை சாடிய ஆஸி. பத்திரிகைகள்!

webteam

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித், நாட்டுக்கு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதாக அந்நாட்டு பத்திரிகைகள் சாடியுள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராப்ஃட் தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது. இதேபோல் பேன்கிராப்ஃட்க்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்துள்ளது. 

இந்நிலையில் ஸ்மித்தின் செயல் நாட்டுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிட்னி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் விளையாட்டு பற்றி எழுதும் ராபர்ட் கிராடாக், ஸ்மித்தின் முடிவு அந்த நிமிடம் எடுக்கப்பட்ட முட்டாள்தனமல்ல, ஏற்கனவே திட்டமிடப்பட்ட முட்டாள்தனம். வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுயக் கட்டுப்பாட்டை மீறியதால் கிரிக்கெட் உலகின் முன் தலைகுனிந்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மித்தின் மரியாதை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய அணியின் கண்ணியம், மரியாதை நீண்டகாலம் மீளப்போவதில்லை’ என கூறியுள்ளார். 

சிட்னி ஹெரால்டு பத்திரிகை, ஸ்மித் சதியில் விழுததால், அதற்கான விலையை கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு இந்த சுற்றுப்பயணம் அவப்பெயர் பெற்றுத்தரக் கூடியதாக அமைந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் மதிப்பு தாழ்ந்து விட் டது. இதை மீட்டெடுக்க நீண்ட காலம் வேண்டும் எனக் கூறியுள்ளது. 

கிரிக்கெட் குறித்து எழுதிவரும் பத்திரிகையாளர் பீட்டர் லாலர், டிரெஸ்சிங் ரூமில் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்திருந்தால், இதுபோன்ற கேவலமான வேலைகளை செய்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல ஆஸ்திரேலிய பத்திரிகைகள் ஸ்மித்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.