இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதன் பிறகு ஷமி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரச்னை முடிவுக்கு வந்த பாடில்லை. ஷமியின் மனைவி ஹசின், தனக்கும் தனது மகளுக்கும் வாழ்வாதாரம் இல்லை என்றும், உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். இவர்கள் பிரச்னை நீதிமன்றங்கள் சென்றும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ள ஹசின், தற்போது ஃபத்வா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆங்கில ஊடங்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், “நான் ஃபத்வா திரைப்படத்தில் ஒரு செய்தியாளராக நடிக்கிறேன். நான் வாழ்வில் ஒரு பிரபலமாக இருக்க விரும்பினேன். நான் ஷமியை திருமணம் செய்யவில்லை என்றால், ஒரு ஜாம்பவானை திருமணம் செய்திருப்பேன். நான் இப்போது மும்பைக்கு வந்துள்ளேன். நான் இங்கு வந்திருப்பது எனது எதிர்காலத்திற்காகவும், எனது மகளின் எதிர்காலத்திற்காகவும் தான். அவர் என்னை விவாகரத்து செய்ய நினைக்கிறார். ஆனால் நான் நினைக்கவில்லை. ஏனெனில் எந்த ஒழுக்கமற்ற செயலிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால், அவரது குற்றங்களை மறைக்க அவர் என்னை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஹசின், “அவருடன் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு, நான் வெளியில் நடமாடுவது கடினமான ஒரு செயலாக மாறியது. நான் ஒரு அறையில் முடங்கிப்போனேன். தற்போது நான் 80 கிலோ இருக்கின்றேன். எனது குழந்தையை நான் வளர்க்க வேண்டும். என்னிடம் எந்த வருமானமும் இல்லை. பின்னர் ஏன்? நான் எனது கணவரை விவாகரத்து செய்யவேண்டும்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.