விளையாட்டு

இயற்கை விவசாயி ஆக உருவெடுக்கும் தோனி : கிரிக்கெட் ஓய்வு குறித்தும் புதிய தகவல்..!

webteam

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தற்போது இயற்கை விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்திய சமூக வலைத்தளங்களில் இன்று திரும்பிய பக்கமெல்லாம் ட்ரெண்ட் செய்யப்பட்ட பெயர் தோனி. தோனி பிறந்த நாளை, ஹேஸ்டேக் போட்டே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். தோனியின் சாதனைகள், தோனியின் பெருந்தன்மைகள், தோனியின் வெற்றிகள், தோனியின் மென்மை, தோனியின் பொறுமை என புகழ்ச்சி மழையை அவரது ரசிகர்கள் பொழிந்துள்ளனர். இப்படி சமூக வலைத்தளங்கள் தோனியால் பரபரப்பாக கொண்டாட்டத்தில் மூழ்க, தோனியோ சத்தமில்லமால் இருக்கும் அமைதியான பண்ணை வீட்டில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.

39வது பிறந்த தினத்தை இன்று அவர் தனது குடும்பத்தினருடன் மிக எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அதேசமயம் தனது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் அந்த உரம் தரும் விளைச்சலைப் பொறுத்து, அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உர விற்பனையை தோனி தனது தரப்பிலிருந்து தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராக்டர் ஒன்றை தோனி ஓட்டிய வீடியோ வெளியானது. அத்துடன் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி விளக்கியிருந்தார். இந்நிலையில் தோனி தரப்பிலிருந்து ‘நியோ குளோபல்’ என்ற நிறுவனத்தின் கீழ் உரம் விற்பனை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உரம் விற்பனையை தோனி தொடங்கிறார் என்றால், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ? என்ற கேள்வி, அவரது மேலாளரும், சிறுவயது நண்பருமான மஹிர் திவாகரிடம் பிடிஐ செய்தி நிறுவனம் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது.

அப்போது பதிலளித்து பேசிய திவாகர், “தேசபக்தி என்பது தோனியின் ரத்தத்தில் கலந்துள்ளது. அவர் நாட்டிற்காக முன்பு ராணுவத்தில் சேவை செய்தார். தற்போது விவசாயத்தில் செய்கிறார். நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அவர் தனது 40-50 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதற்காக அனைத்து வியாபார ஒப்பந்தங்களையும் அவர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். கொரோனா விவகாரம் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை அவர் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

அத்துடன், “நாங்கள் விரைவில் இயற்கை உரம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளோம். நியோ குளோபல் என்ற நிறுவனத்தின்கீழ் அதை வெளியிடவுள்ளோம். தற்போது அந்த உரத்தை தோனி தனது பண்ணையில் பயன்படுத்தி வருகிறார். வல்லுநர்கள் குழு, விஞ்ஞானிகள் மற்றும் உரம் உற்பத்தியாளர் மூலம் அந்த உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் அந்த உரம் வெளியிடப்படும். தோனியிடம் நான் நேற்றிரவு கூட பேசினேன். ஆனால் அவரிடம் கிரிக்கெட் குறித்து எதுவும் பேசவில்லை. இருப்பினும் தோனி ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அதற்காக அவர் தனது உடலை தயார்படுத்தி வருகிறார். கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்து தற்போது தோனி எதையும் சிந்திக்கவில்லை” என்று திவாகர் கூறினார்.