தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்சிஏ) உடல்தகுதித் தேர்வு செய்யாததால் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை என்சிஏ தலைவர் ராகுல் திராவிட் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்ட விவகாரத்தில் இப்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
அண்மையில் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியில் தேர்வாக இருக்கும் வீரர்கள் என்சிஏவில் உடல் தகுதிச் சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும் என தெரிவித்திருந்தார். பும்ரா குறித்தான வெளியான செய்திக்குதான் கங்குலி இவ்வாறு கூறியிருந்தார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, என்சிஏ மையத்தில் பயிற்சி எடுக்காமல் விசாகப்பட்டினத்தில் இந்திய அணியோடு பயிற்சியில் ஈடுபட்டார். பும்ராவின் இந்த செயல்பாடுகள் ராகுல் திராவிட்டுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதாகவும், அதனால் உடல் தகுதித்தேர்வுக்கு சென்ற பும்ராவை திராவிட் புறக்கணித்து திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் என்.சி.ஏ.வில் பும்ராவுக்கு உடற்சோதனை நடத்துவதில் திராவிட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் இதில் வேறு பிரச்னைகள் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் என்சிஏ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது "பும்ராவை எந்த ஒரு கட்டத்திலும் என்.சி.ஏ. மறுக்கவில்லை. நாங்கள் கூறியதெல்லாம் 4 மாதங்களாக வேறு ஒருவரிடம் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவர்தான் உங்கள் உடல் தகுதியை நன்றாக அறிந்திருப்பார், இந்நிலையில் நாங்கள் சோதனை நடத்தி உங்களுக்கு சான்றிதழ் எப்படி அளிக்க முடியும் என்று கூறினோம். என்.சி.ஏ. வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பும்ராவுக்கு சலுகைதான் வழங்கினோம்.,யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொண்டு வந்து டெஸ்ட்களை என்.சி.ஏ.வில் நடத்துங்கள் என்றுதான் கூறினோம். ஆனால் கடைசி நிமிடத்தில் வந்து எனக்கு சோதனை செய்யுங்கள், உடற்தகுதி சான்றிதழ் கொடுங்கள் என்றால் நாங்கள் எப்படி கொடுக்க முடியும் ? அது சாத்தியமா ?" என கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பகிர்ந்து கொண்ட அந்த நபர் " பும்ராவின் காயம் பற்றி இங்குள்ள என்.சி.ஏ பயிற்சியாளர்களுக்கு எந்த ஒரு விவரத்தையும் அளிக்கவில்லை. பும்ராவுடன் என்.சி.ஏ பயிற்சியாளர்கள் ஒருநாள் கூட பயிற்றுவிப்பில் ஈடுபடவில்லை. இவர்கள் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளிக்கவில்லை. இப்படியிருக்கும் போது அவருக்கு சோதனை செய்து சான்றிதழ் எப்படி வழங்க முடியும்? எந்த ஒரு வீரரும் எங்கு வேண்டுமானாலும் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள் ஆனால் இங்கு வந்து சோதனை நடத்தி உடற்தகுதி சான்றிதழ் கோராதீர்கள். ஏனெனில் ஏதேனும் தவறாக நிகழ்ந்தால் என்.சி.ஏ.வைத்தான் குற்றம்சாட்டுகின்றனர்" என்றார் அந்த என்சிஏ அதிகாரி.