இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றி விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார், முன்னாள் பாகிஸ்தான் வீரரான தனிஷ் கனேரியா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடைபெற்றுவரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில், 2-0 என வெற்றிபெற்று இந்திய அணி முன்னிலை வகித்துள்ள நிலையில், 3ஆவது போட்டியில் சிறப்பாக கம்பேக் கொடுத்து ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய அணியின் பேட்டர்கள், எளிதாகவே விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இரண்டாவது இன்னிங்ஸில் 88 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி, 3ஆவது டெஸ்ட் போட்டியை வெற்றிபெற, ஆஸ்திரேலியாவிற்கு வெறும் 76 ரன்களை மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்கள் ஒருவர் கூட சோபிக்காத நிலையில், அனைத்து இந்திய பேட்டர்களையும் சாடியுள்ளார், முன்னாள் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளரான தனிஷ் கனேரியா. அவருடைய யூ-ட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர், ரிஷப் பண்டிடம் இருந்து இந்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என இந்திய அணியின் அனைத்து பேட்டர்களையும் சாடி பேசியுள்ளார்.
பண்ட் மட்டும் இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் விக்கெட்டையே எடுத்திருக்க முடியாது!
இந்தியாவின் பேட்டர்கள் ஏமாற்றம் அளித்ததாக ஆதங்கம் தெரிவித்திருக்கும் தனிஷ் கனேரியா, “ஆஸ்திரேலியாவின் இந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்படி பேட் செய்ய வேண்டுமென்று ரிஷப் பண்ட்டிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் நீங்கள் கேட்டிருந்தால், அவர் உங்கள் கால்களை பயன்படுத்துங்கள், பிறகு பந்து பிட்சாகும் இடத்திற்கு சென்று, கிரவுண்டிற்கு வெளியே நீண்ட தூரத்திற்கு அடித்து பறக்கவிடுங்கள் என்று சொல்லிக்கொடுத்திருப்பார் “ என்று இந்திய அணியின் பேட்டர்கள், எப்படி பந்து பிட்ச் செய்யும் இடத்திலிருந்து ஸ்பின்னர்களை ஆடவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.
மேலும், “பண்ட் மட்டும் இந்த போட்டியில் இருந்திருந்தால், லயன் மற்றும் குஹ்னிமேன் இருவரையும் அவ்வளவு எளிதாக விட்டுவைத்திருக்க மாட்டார். சிறந்த ஃபுட் ஒர்க்கை பயன்படுத்தி கிரவுண்டின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பந்துவீசும் நீளத்தை மாற்றும் விதமாக பவுலர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார். ஆனால் இந்த இந்திய வீரர்கள் மோசமாக விளையாடி ஏமாற்றம் அளித்தனர்” என்று கனேரியா கூறினார்.
முதலில் பேட்டிங் செய்யும் போது அதிக ரன்களை பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருந்தது!
இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் போது அதிக ரன்களை எடுப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை தவறவிட்டதாக பேசியிருக்கும் கனேரியா, “இந்தியா சரியாக பேட்டிங் செய்திருந்தால், முதல் இன்னிங்சில் 250 முதல் 300 ரன்கள் வரை எடுத்திருக்கலாம். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் தேவையே இல்லாத தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடு மட்டுமே, ஆஸ்திரேலியா இந்த போட்டியில் மீண்டு எழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தான் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட், டிசம்பர் 30 அன்று ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.