தோனி தன்னை தட்டி எழுப்பியதாக இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே கூறியுள்ளார்.
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 188 ரன்கள் குவித்தது. பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும் தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அனி, 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 18.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணி, பேட்டிங் செய்தபோது இருபதாவது ஓவரில் மனிஷ் பாண்டேவை தோனி கோபமாக திட்டும் வீடியோ வைரலானது. அதில், ‘ஏய், இங்க பாரு, அங்க என்ன பார்வை. கவனம் இங்க இருக்கட்டும்’ என்று எதிர்முனையில் இருந்து இந்தியில் கத்தினார் தோனி.
போட்டிக்குப் பின் மனிஷ் பாண்டே கூறும்போது, ’அணியில் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பது கடினமாக இருக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் மனச் சஞ்சலம் அதிகம். அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது நம் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்பது புரிகிறது. 4-ம் வரிசையில் சில வாய்ப்புகள் கிடைத்தது. நன்றாகச் செயல்பட்டேன். என்னை 5-ம் வரிசையில் இறங்கும் நிலையில் ஏற்படுகிறது. முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும். இதைத்தான் முதல் போட்டியில் செய்ய நினைத்தேன், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இந்தப் போட்டியில், தோனி என்னை தட்டி எழுப்பினார். பின் களத்தில் அவர் சிறந்த வீரர், 2 ஓவர்களை அவர் ஆதிக்கம் செலுத்தினார். முதலில் 170 ரன்கள் போதும் என்றே நினைத்தோம். தோனி இரண்டு சிறந்த ஷாட்களை விளாசினார். ஸ்கோர் 188 ரன்கள் ஆனது. இந்தப் போட்டியில் ஆடியதை விட என்னால் சிறப்பாக ஆட இயலும். அடுத்தடுத்தப் போட்டிகளிலும் சிறப்பாக ஆட நினைக்கிறேன்’ என்றார்.