விளையாட்டு

ஆம், நான் கருப்புதான்.. நிறத்தைப் பற்றி பேசாதீர்கள்...! - தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா

ஆம், நான் கருப்புதான்.. நிறத்தைப் பற்றி பேசாதீர்கள்...! - தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா

jagadeesh

'ஆம் நான் கருப்புதான் அது என் நிறம், ஆனால் நான் கிரிக்கெட் விளையாடுகிறேன் அதனை காதலிக்கிறேன்' என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றது. அந்தப் போட்டியில் பவுமா 98 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு உதவினார். பவுமா பார்க்க குள்ளமாக இருக்கிறார், கருப்பாக இருக்கிறார் என அவரை சமூக வலைத்தளங்களில் பலர் கிண்டலாக பேசி வந்தனர். அவர் மீதான இந்த விமர்சனத்துக்கு செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார் பவுமா.



அப்போது பேசிய அவர், “ஆம், நான் கருப்புதான். அது என் நிறம், ஆனால் நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். அதனை காதலிக்கிறேன். நான் தென் ஆப்பிரிக்கா அணியில் தொடர்ந்து நீடிப்பது, என்னுடைய சிறப்பான ஆட்டத்துக்காகதான் என நினைக்கிறேன். நான் அணியில் இல்லாதபோது என்னுடைய நிறத்தை காரணமாக காட்டி பலரும் பேசுவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அணியில் நீடிப்பதும், நீக்குவதும் உலகெங்கிலும் நடக்கிறது. நான் மட்டுமே அணியிலிருந்து நீக்கப்படுவது போலவும் வேறு யாரும் நீக்கப்படாதது போலவும் செய்திகள் வருவது வேதனையை தருகிறது" என்றார் பவுமா.

பவுமா கடந்த 4 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து வருகிறார். ஆனால் இங்கிலாந்து அணியுடன் கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. 2016 இல் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக அடியெடுத்து வைத்த பவுமா, இதுவரை ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். காயம் காரணமாகவும் ஃபார்ம் இல்லை என்ற காரணத்துக்காகவும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் அணியில் அவரை சேர்க்காமல் இருந்தது தென் ஆப்பிரிக்கா அணி நிர்வாகம். ஆனால் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கும்படியாக அவரை ஒருநாள் அணியில் சேர்த்தது. ஆனால் பல ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் அவர் நிறத்தையும், உயரத்தையும் கேலி செய்தது.

இப்போது தன்னுடைய பேட்டிங் திறன் குறித்து பேசிய பவுமா "அணியின் பேட்டிங் பயிற்சியாளர் காலிஸ் நான் ஃபார்முக்கு வருவதற்கு பெரிதும் உதவினார். அவருடைய ஒட்டுமொத்த அனுபவத்தையும், பேட்டிங் நுணுக்கத்தையும் எனக்கு கற்று தந்தார். இப்போது எனக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது".