விராட் கோலி திறமையானவர் என்று எல்லோருக்குமே தெரியும், ஆனால் அவர் இத்தனை சதங்களையும், ரன்களையும் குவிப்பார் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் அவர் செய்து காட்டியிருப்பது நம்பமுடியாத அளவு அசாத்தியமானது என்றும் கூறியுள்ளார் விரேந்திர சேவாக்.
ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்த கிரிக்கெட்டர்!
இன்றைய தலைமுறையின் மாஸ்டர் கிரிக்கெட்டர் என்றும், ரன் மெஷின் என்றும் எல்லோராலும் புகழப்படும் ஒரு வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும் தான். அந்தளவு அவர் தன்னுடைய ஆட்டத்தாலும், ரன் குவிப்பாலும் உலக கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல், முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். விராட் கோலியின் முத்திரை ஷாட்களான கவர் டிரைவ் மற்றும் ஆன்-தி-லெக் டிரைவ் என்ற இரண்டிற்கு மட்டுமே அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். பெரிய வித்தியாசமான ஷாட்கள் எதுவும் இல்லாமல், அடித்து ஆடும் யுக்தியும் இல்லாமல், ஒரு கிரிக்கெட் வீரரால் வெறும் முழுமையான கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே வைத்துக்கொண்டு அதிகப்படியான ரன்களை குவிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் விராட் கோலி மட்டும் தான்.
இழந்த ஃபார்மை மீட்ட விராட் கோலி!
2019ஆம் ஆண்டிற்கு பிறகு தனது பழைய பார்மை இழந்த கோலி, அதனை மீண்டும் எடுத்துவர முடியாமல் தடுமாறிவந்தார். கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது 71ஆவது சதத்தை டி20யில் எடுத்து வந்த கோலி, அடுத்த 3 சதங்களை வெறும் 10 போட்டிகளிலேயே அடித்து அசத்தினார். இந்நிலையில், சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை அடித்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சத வறட்சியையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.
கோலி குறித்து விரேந்தர் சேவாக் கருத்து!
தனது 75ஆவது சதத்தை பூர்த்தி செய்ததோடு, தற்போது 494 சர்வதேச போட்டிகளில் 75 சதங்கள் மற்றும் 129 அரைசதங்கள் உட்பட 25,233 ரன்களை குவித்துள்ளார் கோலி. இந்நிலையில் விராட் கோலி இத்தனை சர்வதேச சதங்களை அடிப்பார் என்றும், இவ்வளவு ரன்களை குவிப்பார் என்றும் தான் எப்போதும் நினைத்ததில்லை என்று கூறியுள்ளார், முன்னாள் அதிரடி இந்திய வீரரான விரேந்திர சேவாக்.
விராட் கோலி குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் சேவாக், “எல்லோருக்கும் தெரியும் விராட் கோலி எவ்வளவு திறமையான வீரர் என்று. ஆனால், அவர் உலக கிரிக்கெட் அரங்கில் இந்தளவு ஒரு சிறப்பான இடத்தில் இருப்பார் என்று நான் எப்போதும் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் ஒரு போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் தான் என்னை மாற்றியது, அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
”அந்தப் போட்டி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது”
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில், அவர் லசித் மலிங்காவை எதிர்கொண்டு ஆடிய விதம் என்னை பிரம்மிக்க வைத்தது. அந்தப் போட்டியை வெற்றிபெறவே முடியாத நிலையில் இருந்து எங்களுக்கு வென்று கொடுத்தார் கோலி. அன்று அவர் மீது நான் வைத்திருந்த என் அத்தனை பிம்பங்களையும் தகர்த்தெறிந்தார், நான் நினைத்ததை பொய்யாக்கினார். தற்போது அவர் அடித்திருக்கும் சதங்களின் எண்ணிக்கையும், குவித்திருக்கும் ரன்களும் அசாத்தியமானது” என்று கூறியுள்ளார் சேவாக்.
”கோலியுடன் வந்தவர்கள் இப்போது காணாமல் போய்விட்டனர்”
மேலும், “நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால், எப்போதும் சீரான மற்றும் ஒழுக்கமான ஆட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை விராட் தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே உணர்ந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். வெகு சில வீரர்கள் மட்டுமே இதை விரைவாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
விராட் கோலியோடு வந்த பல வீரர்கள் காணாமல் போய் விட்டனர். அதற்கு பிறகு வந்த ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒயிட்-பால் வடிவ போட்டிகளில் இந்திய அணிக்குள் வந்தார். அதன்பிறகு கோலிக்கும், ரோகித்திற்கும் இடையே ஒரு போட்டி இருந்தது. சில நேரங்களில் இதுபோன்ற போட்டி உங்கள் ஆட்டத்தை மேம்படுத்த உதவுகிறது” என்று சேவாக் கூறினார்.