இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து போராடுகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப்போட்டி மழை காரணமாக நேற்று தாமதமாக தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், தவான் 8 ரன்களிலும் கேப்டன் விராத் கோலி ரன் எதுவும் எடுக்காமலும் லக்மலிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இது போன்ற பிட்ச்-களில் விளையாடுவது மகிழ்ச்சிதான். எளிதான சூழலில் விளையாடுவதை விரும்பவில்லை. இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். கடந்த முறையும் இதுபோன்ற பிட்ச் அமைப்பே இங்கு இருந்தது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பேட்ஸ்மேன்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் பேட்ஸ்மேன்களுக்கு அது கடினமானதுதான். இதற்காக பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்தார்கள் என்று கூற முடியாது. இலங்கை பந்துவீச்சாளர் லக்மலைதான் பாராட்ட வேண்டும். சூழலைப் பயன்படுத்தி சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினார். நமது அணியிலும் அது போன்று ஸ்விங் பந்துகளை வீச தயாராகவே இருக்கிறார்கள்’ என்றார்.