விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக 12 வருட காத்திருப்பு.. விடாமுயற்சியால் சாதித்த உனாத்கட்!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக 12 வருட காத்திருப்பு.. விடாமுயற்சியால் சாதித்த உனாத்கட்!

Rishan Vengai

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி தொடங்கியதிலிருந்தே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனாத்கட் பேசுபொருளாக மாறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு தனது முதல் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெயதேவ் உனாத்கட், 12 வருடங்களுக்கு பிறகு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி விடாமுயற்சிக்கு ஒரு உதாரணமாக மாறியுள்ளார்.

காயம் காரணமாக விலகிய ஷமி - சமுக வலைதளத்தில் எழுப்பப்பட்ட உனாத்கட் பெயர்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, காயம் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்த ஜெயதேவ் உனாத்கட்டின் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்தது. இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு மாற்று வீரராக கடைசி நாளில், 12 வருடங்களிற்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டார் ஜெயதேவ் உனாத்கட்.

12 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்!

இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் 12 வருடங்கள் கழித்து பங்குபெற்ற உனாத்கட், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அமரவைக்கப்பட்டாலும், இன்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். 2010க்கு பிறகு தன்னுடைய இரண்டாவது போட்டியை 2022ல் விளையாடிய உனாத்கட், தன்னுடைய கனவு போட்டி வடிவமான டெஸ்ட் வடிவத்தில் வங்கதேச அணியின் ஓபனர் ஷகிர் ஹாசன் விக்கெட்டை கைப்பற்றி, தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்து காலத்திற்கும் சிறந்த தன்னுடைய கம்பேக்கை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய உனாத்கட் தன்னுடைய இரண்டாவது விக்கெட்டாக முஸ்ஃபிகுர் ரஹிம் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

2010ல் முதல் போட்டி- 2022ல் இரண்டாவது போட்டி

2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார் உனாத்கட். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்று ஆடிய உனாத்கட்டிற்கு, அதற்குபிறகு ஒரு போட்டியில் கூட பங்கேற்று விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உனாத்கட் முதல்போட்டியில் விளையாடிய போது சகவீரராய் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியில் இருந்தார் மற்றும் அவருடைய கேப்டனாய் எம் எஸ் தோனி இருந்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய சிறந்த பிளேயராகவும், சாதனையாளராகவும் பார்க்கப்படும் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் அறிமுகமே ஆகவில்லை.

தற்போது தோனி ஓய்வுபெற்றுவிட்டார், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளாராய் இருக்கிறார், கோலி சிறந்த டெஸ்ட் பேட்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

முதல் போட்டிக்கும் - அடுத்த போட்டிக்கும் உண்டான இடைவெளியில் முதல் இந்திய வீரர்!

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், 12 ஆண்டுகள் மற்றும் 2 நாட்களுக்கு முன்பு டிசம்பர் 16, 2010 அன்று செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்த இடைப்பட்ட காலத்தில், அவர் 118 டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்டுள்ளார். இதன்மூலம் முதல்போட்டிக்கும் அடுத்தபோட்டிக்கும் இடையில் அதிக போட்டிகளை தவறவிட்ட முதல் இந்திய வீரர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இரண்டாவது வீரர் என்ற மோசமான பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உனட்கட் 118 போட்டிகளை தவறவிட்டதை விட, இங்கிலாந்து வீரர் கரேத் பாட்டி 142 போட்டிகளை தவறவிட்டு, அதிக ஆட்டங்களில் விளையாடாமல் இரண்டாவது போட்டியில் பங்கேற்ற வீரராக முதலிடத்தில் உள்ளார்.

2010 உனாத்கட் அணி- 2022 உனாத்கட் அணி!

2010ல் உனாத்கட் அணியில் விளையாடிய போது சகவீரர்களாக விளையாடிய, மற்ற அனைத்துவீரர்களும் தற்போது அணியில் இல்லை. இஷான் ஷர்மாவும் இந்திய அணியின் வருட ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2010ல் உனாத்கட் இருந்த இந்திய அணி: கவுதம் காம்பீர், விரேந்திர ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஸ்மன், சுரேஸ் ரைனா, மகேந்திரசிங் தோனி ( கேப்டன்), ஹர்பஜன் சிங், இஷாண்ட் ஷர்மா, ஸ்ரீஷாந்த், ஜெயதேவ் உனாத்கட்.

2022ல் உனாத்கட் இருக்கும் இந்திய அணி: கேஎல் ராகுல் ( கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், ரவி அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஜெயதேவ் உனாத்கட்.

12 வருட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்று, தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியிருக்கும் உனாத்கட்டை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

வங்கதேசத்திற்கு எதிராக இன்று தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை சாய்க்க, உனாட்கட் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.