மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கவாஸ்கர் பிசிசிஐயைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும், ரஞ்சி சீசனில் தொடர்ந்து பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிவருகிறார், சர்ஃபராஸ் கான். மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், கடந்த 2019-20ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் 154.66 சராசரியுடன் 998 ரன்களையும், 2021-22 ரஞ்சி சீசனில் 122.75 சராசரியுடன், 982 ரன்களையும், நடப்பு சீசனில் 89 சராசரியுடன், இதுவரை 801 ரன்களையும் எடுத்துள்ளார். அதாவது, இவருடைய சராசரி கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
இவருடைய பேட்டிங் சராசரியால் டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பார் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை வருத்தத்துடன் தெரிவித்திருந்த சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா, இர்பான் கான் உள்ளிட்ட இந்திய முன்னாள் வீரர்கள் தேர்வுக் குழுமைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சர்ஃப்ராஸ் கான் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்திவருகிறார். தற்போது நடைபெற்று வரும் டெல்லி - மும்பை அணிகளுக்கான ரஞ்சி தொடரிலும் மீண்டும் ஒரு சதம் அடித்து, தாம் யார் என்பதை நிரூபித்தார்.
இந்த நிலையில், சர்ஃபராஸ் கானுக்கு முன்னாள் வீரரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “சதமடித்துவிட்டு சர்ஃபராஸ் கான், களத்துக்கு வெளியே ஓய்வெடுப்பதில்லை. தொடர்ந்து ஃபீல்டிங் செய்கிறார். இதனால் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டுள்ளார். உங்களுக்கு ஒல்லியான வீரர்கள்தான் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோவுக்குச் சென்று மாடல்களைத் தேர்வு செய்யலாம். அவர்கள் கையில் பேட்டையும் பந்தையும் கொடுத்து அணியில் சேர்த்துக்கொள்ளலாம். கிரிக்கெட் வீரர்கள் எல்லாவிதமான உருவங்களிலும் இருப்பார்கள். உருவத்தைக் கொண்டு ஒரு வீரரைத் தேர்வு செய்யாதீர்கள். எடுத்த ரன்கள், விக்கெட்டுகளைக் கவனியுங்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்