விளையாட்டு

”தோனி தவறாக கணித்து விட்டார்” - 2007 உலககோப்பை கடைசி ஓவர் குறித்து ஆர்பி சிங்!

”தோனி தவறாக கணித்து விட்டார்” - 2007 உலககோப்பை கடைசி ஓவர் குறித்து ஆர்பி சிங்!

Rishan Vengai

2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் கடைசி ஓவரை ஹர்பஜன் தான் வீசியிருக்க வேண்டும், தோனியின் தவறான கணிப்பால் தான் ஜொகிந்தர் ஷர்மா வீசவேண்டியதாக மாறியது என்று கூறியுள்ளார் 2007 உலகக்கோப்பையை வென்ற அணியிலிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஆர்பி சிங்.

தோனி என்ற வெற்றி கேப்டன் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆளுமையாக மாறியது 2007 டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய பிறகு தான். 1983ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, இந்திய அணி 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் மரண அடி வாங்கி தோல்விபெற்று வெளியேறும். அவ்வளவு தான் இந்திய அணியால் அதற்கு பிறகு கோப்பையை எல்லாம் வெல்ல முடியாது, இந்த சாம்பியன் வீரர்களாலேயே வாங்க முடியவில்லை என்றால், பிறகு யார் வந்து கோப்பையை எல்லாம் இந்தியாவிற்கு வென்று தரப்போகிறார்கள் என்ற எண்ணம் எல்லா இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் இருந்தது.

அந்த மனநிலையில் தான் முதல்முறையாக தொடங்கப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி மூத்த வீரர்கள் யாருமின்றி களமிறங்கியது. யாருபா இந்த பையனலாம் கேப்டனா போட்டது, சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் போய் ஆடினாலே ஜெயிப்பது கடினம், இதில் யாரென்றே தெரியாத பையனை எல்லாம் உலகக்கோப்பை கேப்டனாக போட்டது என்ற கேள்விகள் எல்லாம் நிச்சயம் இந்திய ரசிகர்கள் மனங்களில் எழத்தான் செய்தது. அத்தனை மனகுமுறல்களையும் குதூகலத்தில் கொண்டு சேர்த்த பெருமை நிச்சயம் கேப்டன் தோனி என்ற ஒருவரை தான் சேரும்.

ஏனென்றால் 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி என்பது ருசியான பண்டம் போன்றது, அந்த ருசியான சுவை இன்னும் இந்திய ரசிகர்களின் மனங்களை விட்டு போகவே இல்லை என்றால் பொய்யாகாது. அதற்கு முக்கியமான காரணம் உலககோப்பை பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது தான், அதுவும் தோற்கும் நிலையில் இருந்த ஒரு போட்டியை இறுதிவரை போராடி வென்றது தான் இன்றளவும் அது கொண்டாடக்கூடிய ஒரு போட்டியாக இருந்து வருகிறது.

அப்படிபட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரை யாராலும் மறக்க முடியாது. கடைசி 6 பந்துகளில் 13 ரன்களை எடுத்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுவிடும், இந்தியாவிற்கு தேவையான ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் போட்டியை இந்தியா வென்றுவிடும். ஆனால் போட்டியில் பவுலர்களை எதிர்கொள்ள போகிறது மிஸ்பா உல்ஹக், அவர் ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை, ஆனால் 3 பெரிய சிக்சர்களை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடித்து இந்த கோப்பையை வென்றே தீருவேன் என களத்தில் நின்று கொண்டிருந்தார். கோப்பையை வெல்ல 13 ரன்களை தடுத்து நிறுத்தும் ஒரு பவுலரை களமிறக்க வேண்டும்.

ஆனால் அந்த சமயத்தில் ஜொகிந்தர் ஷர்மாவை களமிறக்கி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் எம் எஸ் தோனி. போச்சு ஆட்டம் அவ்வளவுதான் என்று புலம்பிகொண்டிருக்கும் போதே ஒரு சிக்சரை கிரவுண்டிற்குள் அனுப்பி விட்டார் மிஸ்பா. வெற்றி யாருக்கு என்ற அழுத்தத்தில் பல ரசிகர்களுக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது என்றால் மிகையாகாது. 4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையென்ற இடத்தில் பந்தை பின்னால் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கைகளில் கொடுத்துவிட்டு மிஸ்பா அவுட்டாக, இந்தியா கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.

அப்போது ஜொகிந்தர் சர்மாவை பயன்படுத்தியது, கேப்டன் தோனிக்கு பெரிய பாராட்டை பெற்று தந்தது. ஆனால் தற்போது உலகக்கோப்பையின் கடைசி ஓவரை ஏன் ஜொகிந்தர் ஷர்மா வீசினார் என்பதும், எப்படி தோனியின் கணிப்பு தவறாக போனது என்பதும் குறித்து கூறியுள்ளார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர் பி சிங்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 லீக்கில் கமண்டெரி செக்சனில் பேசியிருக்கும் ஆர்பி சிங் கூறுகையில், “ தோனிக்கு கடைசி ஓவரை விட 18ஆவது மற்றும் 19ஆவது ஓவர் தான் முக்கியம் என நினைத்தார். மிஸ்பா கடைசிவரை நிற்பார் என்று தோனி நினைக்கவில்லை. அவருடைய விக்கெட்டை கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர்களிலேயே வீழ்த்தி விடலாம் என்று நினைத்திருந்தார் தோனி. ஆனால் அவர் கணிப்பை தகர்த்து ஹர்பஜன் வீசிய 17ஆவது ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட மிஸ்பா, இறுதிவரை களத்தில் இருந்தார். 18ஆவது, 19ஆவது ஓவரை நானும், ஸ்ரீசாந்தும் வீசினோம். 20ஆவது ஓவரை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பமே இருந்தது. ஹர்பஜன் முந்தைய ஓவரில் மிஸ்பாவிற்கு எதிராக 19 ரன்களை கொடுத்திருந்தார், ஒருவேளை இடதுகை பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் ஹர்பஜன் தான் வீசியிருப்பார். இறுதி முடிவாக தான் ஜொகிந்தர் ஷர்மாவிடம் தோனி சென்றார்” என்று கூறியுள்ளார்.