விளையாட்டு

“சச்சின் போன்று பேட்ஸ்மேனாக நினைத்தேன்” - மனம் திறந்த அஜித் அகர்கர்

“சச்சின் போன்று பேட்ஸ்மேனாக நினைத்தேன்” - மனம் திறந்த அஜித் அகர்கர்

webteam

இந்தியாவின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தான் சச்சின் போன்று பேட்ஸ்மேனாக நினைத்ததாகக் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதில் குறிப்பிடத்தக்கப் பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் அஜித் அகர்கர். இந்திய அணிக்காக விளையாடி 349 சர்வதேச விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் தான் உண்மையில் ஒரு பேட்ஸ்மேனாகவே விரும்பியதாக அஜித் அகர்கர் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான சமூக வலைத்தள உரையாடல் ஒன்றில் பேசியுள்ள அஜித் அகர்கர், “நானும் சச்சினும் மும்பையிலிருந்து கிரிக்கெட்டிற்கு வந்தோம். பள்ளிப்பருவத்தில் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்துள்ளோம். சச்சினுக்குப் பிறகு நான் தான் களமிறங்குவேன். ஆரம்பத்தில் நானும் ஒரு பேட்ஸ்மேனாக வேண்டுமென்றே நினைத்தேன். எனது பயிற்சியாளரும் நான் பேட்ஸ்மேனாக வேண்டுமென்றே விரும்பினார். எங்கள் பயிற்சி தளத்தில் சச்சினுடன் விளையாடிய பலரும் சிறப்பாக ஆடினோம். எங்கள் அகாதெமி மூலம் பலரும் கிரிக்கெட் உலகிற்கு வந்தோம்” என்றார்.

சர்வதேச போட்டிகளில் பந்துவீச்சாளர் என்பதால் அஜித் அகர்கருக்குப் பெரிதும் பேட்டிங் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் சார்ஜா கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக 30 மற்றும் 26 ரன்களை குவித்திருக்கிறார். 2002ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒருமுறை சதம் அடித்திருக்கிறார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒன்றில், தொடர்ந்து ஆறு முறை பூஜ்ஜியம் ரன்னில் அவுட் ஆகி சொதப்பியும் உள்ளார்.