விளையாட்டு

நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி- குவியும் பாராட்டுகள்

நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி- குவியும் பாராட்டுகள்

webteam

உலகக் கோப்பை போட்டியில் தோனி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதம்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சின்போது விக்கட் கீப்பர் தோனி தனது நாட்டை பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அரிய செயலை செய்துள்ளார். இதற்காக அவர் சமூக வலைத்தளங்களில் அதிக பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டு வருகிறார். நேற்றைய போட்டியில் கீப்பிங் கையுறையில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ‘பாலிதான்’ என்பதன் முத்திரையை பதித்து உபயோக படுத்தினார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ செய்வது ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு தோனி பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியும் மேற்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. 

இந்நிலையில் தோனியின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை ஈட்டியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், “இதனால்தான் உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்” எனவும் மற்றொரு தரப்பினர், “தோனியின் நாட்டுப் பற்றிற்கு சல்யூட்” எனவும் பதிவிட்டுள்ளனர்.