விளையாட்டு

”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்

”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்

webteam


இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரைவில் ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால் கேள்வி எழுப்பப்படும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சமீபத்தில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். எனினும் இவர் காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு சரியாக ரன்கள் அடிக்கவில்லை. இவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் 36, 40 ஆகிய ரன்கள் அடித்திருந்தார். அத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவர் 42 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். 

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு ஷிகர் தவான் ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால் அவரின் ஆட்டத்தின் மீது கேள்வி எழுப்பப்படும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஷிகர் தவான் அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அவர் ஆட்டத்தின் மீது கேள்வி எழுப்பப்படலாம். ஏனென்றால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 40-45 ரன்களை அதே பந்துகளில் அடித்தால் அணிக்கு எந்தவித நன்மையும் இருக்காது. இது குறித்து ஷிகர் தவான் சிந்திக்க வேண்டும். காயத்திற்கு பிறகு வரும் வீரர்கள் மீண்டும் ஃபார்மிற்கு வர சில நாட்கள் ஆகும்.

மேலும் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்பு நடைபெறும் டி20 போட்டிகள் சிலவற்றில் வெற்றிப் பெற வேண்டும். அப்போது தான் இந்திய அணி தரவரிசையில் முன்னேறுவதுடன் உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.