விளையாட்டு

பயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன?

பயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன?

webteam

“உலகக் கோப்பை தொடரில் ஒரு மோசமான நாள் மட்டுமே அணியை மோசமானதாக்காது” என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் பயிற்சியாளராக நேற்று மீண்டும் ரவி சாஸ்திரி அறிவிக்கப்பட்டார். இவர் வரும் 2021/ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிப்பார். இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான குழு இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. முன்னதாக இந்தக் குழு நேற்று பயிற்சியாளர் பதவிக்கு 6 பேரை நேர்காணல் நடத்தியது. 

இந்நிலையில் இந்த நேர்காணலில் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்ட கருத்துகள் குறித்து நிர்வாகி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்த நேர்காணலில் ரவி சாஸ்திரியிடம் இந்திய அணியின் உலகக் கோப்பை தொடர் தோல்வி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்தத் தொடரில் ஒரு மோசமான நாள் அணியை மோசமானதாக ஆக்காது என்று தெரிவித்தார். அத்துடன் சாஸ்திரி தனக்கு இந்திய அணியில் ஒரு சில வேலைகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். 

மேலும் அவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு புகழாரம் அளித்தார். இந்திய கேப்டன் கோலி அணியின் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்று சாஸ்திரி தெரிவித்தார். எனவே இத்தகைய கேப்டனை கொண்ட இந்திய அணி மிகவும் சிறப்பு வாய்ந்த அணியாக தான் இருக்கும் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார். அத்துடன் விராட் கோலி அணியின் வீரர்களின் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துவதால் அணி நல்ல முறையில் உள்ளதாக சாஸ்திரி கூறினார். 

சாஸ்திரி மட்டுமின்றி பயிற்சியாளர் தேர்வுக்குழுவிற்கு அதிக நெருக்கடி அளித்தவர் முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன். ஏனென்றால் இந்த நேர்காணலில் மைக் ஹெசன் அளித்த திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாக தேர்வுக்குழுவினர் கருதினர். எனினும் ரவி சாஸ்திரிக்கு இந்திய அணி வீரர்களின் விளையாட்டு திறன் குறித்து நன்றாக தெரியும் என்பதால் மைக் ஹெசனைவிட சாஸ்திரி இப்பதவிக்கு ஏற்றவர் எனத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.