விளையாட்டு

“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை

“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை

webteam

விராட் கோலி பந்துவீச்சாளர்களின் கேப்டன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரோகித் ஷர்மா சதம் கடந்து அசத்தினார். அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து சோயிப் அக்தர் தனது யூடியூப் சானலில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விராட் கோலி பந்துவீச்சாளர்களின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஏனென்றால் அவர் தனது பந்துவீச்சாளர்கள் பந்துவீசி விக்கெட் அள்ளும் போது அவர் அதனை ரசித்து வருகிறார். இப்படி ஒரு கேப்டன் இருப்பது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் நல்லது. 

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், தன்னால் இந்தியாவிற்கு சிறப்பாக விளையாட முடியவில்லை எனக் கூறினார். நான் அவருக்கு நல்ல அறிவுரையை வழங்கினேன். ஏனென்றால் தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில் அவருக்கும் மட்டும் தான் ரிவர்ஸ் ஸ்வீங்(Reverse Swing) சிறப்பாக வருகிறது. இந்திய துணை கண்ட ஆடுகளங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் ரிவர்ஸ் ஸ்வீங்கின் ராஜாவாக வலம் வரலாம் என்று ஷமிக்கு அறிவுரை வழங்கினேன். 

அதேபோல தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் ஷமி விக்கெட் எடுத்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னிடம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் யாரும் ஆலோசனை கேட்பதில்லை. ஆனால் ஷமி போன்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ஆலோசனை கேட்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.