தோனியின் ஓய்வு குறித்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மக்களவை உறுப்பினருமான கௌதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவர் ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார். ஆகவே அவர் விரைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தனது ஓய்வை அறிவித்து விடுவார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் மக்களவை உறுப்பினருமான கௌதம் காம்பீர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஓய்வு முடிவை அறிவிப்பது என்பது அந்த வீரரின் சொந்த முடிவாகும். அதில் யாரும் தலையிட முடியாது. அவர் எவ்வளவு காலம் விளையாட நினைக்கிறாரோ அதுவரை அவர் விளையாடலாம். என்னை பொருத்தவரை அடுத்த 2023 உலகக் கோப்பை தொடரில் தோனி விளையாட வாய்ப்பில்லை.
ஆகவே அணியின் கேப்டன் விராட் கோலி அல்லது அணி நிர்வாகத்திலிருந்து யாராவது ஒருவர் இது தொடர்பாக முடிவை எடுக்கவேண்டும். அவர் வருங்கால அணியில் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஏனென்றால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களை சிறப்பான வீரர்களாக மாற்ற முடியும். இந்த முடிவை தோனி என்ற வீரருக்காக பார்க்காமல் அணியின் நலனிற்காக எடுக்கவேண்டும்.
ஆகவே என்னைப் பொறுத்தவரை இந்திய அணி தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்திய அணி அடுத்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இளம் வீரர்களுக்கு இப்போது இருந்தே வாய்ப்பு அளிக்கவேண்டும். அது ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் அல்லது வேறொரு வீரர் யாராக இருந்தாலும் சரி” எனத் தெரிவித்துள்ளார்.