விளையாட்டு

அந்த சிரிப்புக்கு பின்னால் இருந்த சோகம்... - 9 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சங்ககாரா

webteam

ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு பின், தோல்விக்கு பின் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா சிரித்த சிரிப்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா. தோனியும், யுவராஜ்சிங்கும் களத்தில் நின்று வெற்றியை ருசித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் 2011ம் ஆண்டை தனக்கானதாக மாற்ற முயற்சித்தது இலங்கை. ஆனால் அந்த முறையும் தோல்வியையே தழுவியது.

உலகக் கோப்பை கைநழுவி போகும் அந்தக்கணத்தில் யாராக இருந்தாலும் கலங்கிப்போவர். ஆனால் சங்ககாரா சிரித்துக்கொண்டு இருந்தார். புன்முறுவலுடன் அந்த தோல்வியை அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு தன் சிரிப்புக்கு பின்னால் இருந்த சோகம் குறித்து சங்ககாரா பேசியுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் வசிப்பதே நமக்கு பல ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கற்றுக்கொடுத்துள்ளது. நாங்கள் 30 வருடங்களாக போரில் இருந்தோம். இயற்கைச் சீற்றங்களைப் பார்த்துள்ளோம். எங்களுக்கு பலவிதமான பிரச்னைகள் உள்ளன. இயற்கையிலேயே நாங்கள் எதையும் தாங்கக் கூடியவர்கள். சமாளிக்கக்கூடியவர்கள். இது எங்கள் பிறப்பிலேயே இருக்கிறது. நாங்கள் விளையாடும்போது, நாங்கள் வெல்ல விரும்புகிறோம், நாங்கள் போராடக்கூடியவர்கள்.

வெற்றிப் பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதனை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது முக்கியம். 1996 முதல் இலங்கையில் உள்ள 20 மில்லியன் மக்கள் காத்திருந்த ஒரு தருணத்தில் ஏமாற்றத்தை, பெரும் சோகத்தை நான் அந்த சிரிப்புக்குள் வைத்திருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்