விளையாட்டு

"ஜடேஜா ஒரு ராக்ஸ்டார்" - ஹாட்ரிக் விக்கெட் சாய்த்த ஆஸி. வீரர் ஆஷ்டன் அகர்

"ஜடேஜா ஒரு ராக்ஸ்டார்" - ஹாட்ரிக் விக்கெட் சாய்த்த ஆஸி. வீரர் ஆஷ்டன் அகர்

jagadeesh

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா போல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஆஷ்டன் அகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஷ்டன் அகர் இந்திய வீரர் ஜடேஜாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது பேசிய அவர் "இந்திய சுற்றுப் பயணத்தின் போது ஜடேஜாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். உலகிலேயே ஜடேஜாதான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். நான் அவரைப்போல விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜடேஜா ஒரு ராக்ஸ்டார், பந்துகளை சிதறடிப்பார், துப்பாக்கியில் இருந்து வெளியேறும் தோட்டோப்போல பீல்டிங் செய்வார், பந்தை பிரமாதமாக ஸ்பின்னும் செய்வார்" என்றார்.

மேலும், தொடர்ந்த அவர், "எனக்கு ஜடேஜாவின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும். பந்தை ஸ்பின் செய்வது குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் தான் இன்னும் ஸ்பின் கற்றுக்கொண்டு இருப்பதாக கூறினார். அதேபோல அவர் பேட்டிங் செய்யும்போது நேர்மறை எண்ணத்தோடு செயல்படுகிறார், அதே உத்வேகத்தோடு பீல்டிங்கில் ஈடுபடுகிறார்" என்றார்.

தென் ஆப்பிரிக்கா அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா கைபற்ற ஆஷ்டன் அகர் முக்கிய காரணமாக இருந்தார். இந்தத் தொடரின் கடைசி ஆட்டத்தில் இவர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து அசத்தினார். சிறப்பாக பந்து வீசியதற்காக ஆட்ட நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.