ஆடுகளத்தில் தான் கங்குலியை வெறுத்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நசீர் ஹூசைன் கூறியுள்ளார்.
இந்திய அணியை மாற்றியமைத்ததில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு முக்கிய பங்கு உண்டு. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது, எதிரணியினரிடம் ஆக்ரோஷமாக சண்டையிடுவது, அவர்களை வென்ற பின் இவர் செய்யும் சேட்டைகள் என இந்திய அணியின் தாதாவாக வலம் வந்தார் கங்குலி.
அதேபோல அவரின் நேரம் தவறும் தன்மைக்கும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நசீர் ஹூசைன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிரிக்கெட் இன்சைடு அண்டு அவுட்சைடு நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்த அவர் “ ஆடுகளத்தில் நான் கங்குலியை வெறுப்பவராக இருக்கிறேன். கங்குலிக்கு எதிராக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் டாஸ் விடுவதற்கு முன்பு கங்குலி என்னை காக்க வைத்திருக்கிறார். நானும் அப்படிதான், மணி 10.30 ஆன பின்பும் கூட அவர் வராமல் இருந்திருக்கிறார்.
ஆனால் தற்போது கிரிக்கெட் கமெண்ட்ரிக்காக நான் அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவர் எவ்வளவு அமைதியானவர் என்பது தற்போதுதான் தெரிகிறது. ஆனால் தற்போதும் அவர் நேரம் தவறிதான் வருகிறார்” என்று பேசியுள்ளார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் பற்றி பேசிய அவர் “ சச்சினை ஆட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்கு நாங்கள் பலமுறை முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் அவர் மிகவும் நுட்பமான திறமை கொண்டவர். அவரை அவுட் ஆக்குவதற்கு எங்கள் அணியினர் களத்தில் எத்தனை முறை கூடியிருப்போம் எனத் தெரியவில்லை”என்று பேசியுள்ளார்.