விளையாட்டு

'யுவராஜ் சிங்கின் முதுகை உடைத்தேன்’ - நினைவுகளை பகிர்ந்த ஷோயப் அக்தர்

'யுவராஜ் சிங்கின் முதுகை உடைத்தேன்’ - நினைவுகளை பகிர்ந்த ஷோயப் அக்தர்

JustinDurai

எப்போதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் அன்பும்-வெறுப்புமான உறவைக் கொண்டிருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர். அவரது மிரட்டலான பவுலிங்கை போலவே அவரது நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும்.

விளையாடும் நாட்களில், அக்தர் எப்போதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். ஹர்பஜன் மற்றும் ஷேவாக் ஆகியோருடன் அக்தர் கொண்டிருந்த வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொள்கிறார்கள். ஓய்வுக்கு பின்னர், அக்தர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக நிறைய பணியாற்றினார் மற்றும் பல வீரர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டார்.

ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் ரெஸ்லிங் செய்த சம்பவங்களை அக்தர் சமீபத்தில் நினைவு கூர்ந்தார். ரெஸ்லிங்கின் போது சில சமயங்களில் தனது சக வீரர்களையும் எதிரணியினரையும் காயப்படுத்தினேன் என்று அக்தர் நகைச்சுவையாக கூறினார்.

“நான் ரெஸ்லிங் செய்யவில்லை, மற்றவர்களிடம் என் அன்பை காண்பிப்பதற்கான எனது வழி இது.  வெளியிலிருந்து பார்த்தால் எல்லை மீறுவது போலிருக்கும். ஆனால் நான் ஒருவரை விரும்பும்போது, நான் அவர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வேன். ”

“நான் யுவராஜ் சிங்கை கட்டியணைக்கும் போது அவரது முதுகெலும்பு சற்று நொறுங்கிதான் போனது. முன்பு அப்ரிடியை கட்டியணைத்து அவரது விலா எலும்புகளை உடைத்தேன். அப்துல் ரசாக்குக்கும் இப்படி நடந்துள்ளது.

இதுவே என் அன்பை காண்பிக்கும் பாணி. என் இளமை நாட்களில் நான் இப்படித்தான் முட்டாள்தனமாக இருந்தேன்” அக்தர் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். 

சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை கிளப்புவதில் அக்தர் பெயர் பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அணியில் நுழைந்து, 1999-ல் கொல்கத்தா டெஸ்டின் போது தனது வாழ்க்கையில் முதல்முறையாக சச்சினுக்கு பந்து வீசிய அனுபவத்தை அக்தர் பகிர்ந்து கொண்டார்.

‘’சச்சினை கிரிக்கெட்டின் கடவுள் என்று பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அவர் உண்மையில் கிரிக்கெட்டின் கடவுளா? அவரை அவ்வாறு அங்கீகரிக்க நான் விரும்பவில்லை’ என்றார் அவர்.