விளையாட்டு

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்: ராயுடு புகார், அசாருதின் மறுப்பு

webteam

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் மலிந்துள்ளதாக, அம்பத்தி ராயுடு கூறியுள்ள புகாரை மறுத்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் அசாருதின், ராயுடு விரக்தியில் பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, பின்னர் தனது முடிவை மாற்றினார். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தார். இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளது. இப்படி பணம் மற்றும் ஊழல்வாதிகளால் கிரிக்கெட் சங்கம் நிரம்பியிருந்தால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும்? உடனடியாக இதுபற்றி விசாரிக்க வேண்டுகிறேன்’ என்று கூறியிருந்தார். 

மேலும் அவர் கூறும்போது, ’’ரஞ்சி போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். அணியில் அதிக அளவில் அரசியல் உள்ளது. இதனால் வரும் ரஞ்சி தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடமாட்டேன். புதிய தலைவர் அசாருதீனிடம் இந்த பிரச்னை விவாதித்தேன். உரிய முயற்சிகளை எடுப்பதாகக் கூறினார். திறமை இல்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்று கூறியிருந்தார்.

அம்பத்தி ராயுடுவின் புகார் பற்றி ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் அசாருதினிடம் கேட்டபோது, ’அவர் விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்’ என்றார்.