விளையாட்டு

“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்

“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்

rajakannan

2020 டி20 உலகக் கோப்பை தொடருக்கான என்னுடைய விருப்ப அணியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு இடமில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி எந்தவொரு தொடரிலும் விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவராக விலகிக் கொண்டார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டி20 போட்டிகளில் தோனியை அணியில் சேர்க்கும் எண்ணம் பிசிசிஐக்கு சுத்தமாக இல்லை என்பதை அதன் நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர். 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு புதிய விக்கெட் கீப்பரை தயார் செய்ய வேண்டும் என்பதால், தோனி தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என பலரும் கூறுகின்றனர். இருப்பினும், தோனி எந்தவொரு கருத்தினையும் தெரிவிக்காமல் இருக்கிறார். விரைவில் டி20 போட்டிக்கான ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிடுவார் என்ற தகவல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

இந்நிலையில், 2020 டி20 உலகக் கோப்பை தொடருக்கான என்னுடைய விருப்ப அணியில் தோனிக்கு இடமில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். பங்களாதேஷ் அணி உடனான தொடருக்கு தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கவாஸ்கர், “இல்லை. அவரைத் தாண்டி வெறொரு வீரரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார். ஒரு வேளை பண்ட் சரியாக விளையாடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் அடுத்த சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்வார். 

டி20 உலகக் கோப்பை தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறையவே பங்களிப்பு செலுத்தியுள்ளார். ஆனால், தற்போது அவரைத் தாண்டி ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. வெளியேற்றுவதற்கு முன்பு தோனியாக விலகிக் கொள்ள வேண்டும்” என்றார். 

இந்திய அணியில் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறங்கி வருகிறார். ஆனால், விக்கெட் கீப்பராக அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதேபோல், அவரது பேட்டிங் மீது இருந்த எதிர்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. அதனால், மீண்டும் தோனியே டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா அல்லது வேறொரு ஒரு விக்கெட் கீப்பரை முயற்சி செய்து பார்ப்பார்களா? என்பது பங்களாதேஷ் தொடரின் போது தெரியும்.