விளையாட்டு

’அல்லா பதிலளித்துவிட்டார்’: பாக்.கில் கொண்டாட்ட மழை!

’அல்லா பதிலளித்துவிட்டார்’: பாக்.கில் கொண்டாட்ட மழை!

webteam

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கோப்பையை வென்றிருக்கிறது. இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சில நகரங்களில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இதை பாகிஸ்தான் டிவி சேனல்கள் ஒளிபரப்பின. 

சாலையில் வியாபாரம் செய்து வரும், நேக் அமல் கான் என்பவர் கூறும்போது, ‘அதிக மகழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைக்கு அல்லா பதில் சொல்லிவிட்டார்’ என்றார்.

சிலர் ஆனந்த கண்ணீர் விட்டபடி இனிப்புகளை விநியோகித்தனர். கராச்சியை சேர்ந்த ஸ்டாக் புரோக்கர் ஹாரிஸ் அலி என்பவர் கூறும்போது, ‘பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வெல்லும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது நம்ப முடியாத திருப்பம்தான்’ என்றார். தள்ளுவண்டியில் மாம்பழம் விற்கும் பாபர் கான் என்பவர், ‘இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது’ என்றார்.

டெல்லியில் அப்படியே நேர் மாறாக இருந்தது. பெரிய திரைகளில் கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் கோஷம் எழுப்பினர். பின்னர் படிப்படியாக அவர்கள் ஆர்வம் குறைந்து அமைதியாகிவிட்டனர்.

காஷ்மீரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பலர் கோஷமிட்டனர். அந்நாட்டு கொடியை ஏந்தியபடி அவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அடித்து விரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.