Tirupathi thirumalai pt desk
ஆன்மீகம்

திருப்பதி ரத சப்தமி விழா: பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கும் திருமலை – நாள் முழுவதும் வாகன உலா!

ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி திருமலை பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் 4 மாட வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

webteam

செய்தியாளர்கள்: எழில் கிருஷ்ணா, தினேஷ் குணகலா

சூரியன் தை மாதம் வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கும் சூரிய ஜெயந்தி விழா ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. திருப்பதியில் ஆண்டு தோறும் 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடத்தப்படும் நிலையில், 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருடாந்திர பிரமோற்சவமும், நவராத்திரி பிரமோற்சவமும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

Tirupathi Thirumalai

இந்நிலையில் ரத சப்தமியான இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மலையப்ப சுவாமி காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 முதல் 2 வரை அனுமந்த வாகனத்திலும் உலா வருவார். பகல் 2 முதல் 3 வரை தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானமும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பவிருட்ச வாகனத்திலும் மலையப்ப சுவாமி உலா வருவார். மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இறுதியாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக விஐபி தரிசனம் தவிர, மற்ற விருப்ப தரிசனங்களான மூத்த குடிமக்களுக்கான தரிசனம், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், கைக் குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான தரிசனம் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று முதல் நாளை வரை (பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி) ஸ்ரீவாரி சர்வ தரிசன டோக்கன் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் காத்திருப்பு அறைகளில் நிறுத்தி வைக்கப்படாமல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2 வழியாக நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

Devotees

இந்நிலையில் ₹300 சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் தங்களுக்கான நேரத்தில் வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் அவர்களும் வைகுண்டம் 2 வழியாக மட்டுமே டைம் ஸ்லாட் ஏதும் இன்றி நேரடியாக சுவாமி தரிசனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒரு நாள் பிரம்மோற்சவ வைபவமான ரத சப்தமியை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏகாந்தத்தின் போது நடைபெறுகின்றன.