“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தமிழக கேரள வன எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் மங்களதேவி மலை உச்சியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மங்களதேவி கண்ணகி கோவிலில் இன்று (05.05.23) சித்திரை முழு நிலவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வன உயிரியல் காப்பக வனச் சாலைகள் திறந்து விடப்பட்டுள்ளன. குமளியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணகி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வழியாக ஜீப் மூலம் சென்று கொண்டிருக்கின்றனர். அதேபோல் பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் அருகே பளியங்குடி பகுதியில் இருந்தும், இந்த ஆண்டு புதிதாக ஊமையன் தொழு பகுதியில் இருந்தும் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
வழக்கமாக கண்ணகி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை தமிழக அரசின் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கோவில் தொல்லியல் துறையின் ஆய்வில் உள்ளது.
இந்நிலையில் பக்தர்களின் குடிநீர், போக்குவரத்து சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக தமிழக கேரள அரசுகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று (05.05.23) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தேனி ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார்.