கள்ளழகர் கோயில் File Image
கதைகள்

சித்திரை திருவிழா: கள்ளழகர் கம்பீரமாக வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலை கோயிலின் புராண வரலாறு!

அழகர் எந்த வண்ண வஸ்திரம் உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் வளம் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Jayashree A

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

இன்று காலை மதுரை வைகை ஆற்றில் கம்பீரமாக இறங்கினார் கள்ளழகர். இந்த நேரத்தில் அழகர் வீற்றிருக்கும் அழகர் மலையை இங்கே அறிவோம்!

கள்ளழகரின் கோயிலான அழகர் மலையை அறியும் முன், அங்கு ஓடும் நூபுர கங்கையின் சரித்திரத்தை அறிவது அவசியம். ஆகவே அதிலிருந்து தொடங்குவோம்...

நூபுர கங்கையின் சரித்திரம்:

பூலோகம் தொடங்கி சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை தன் தவத்தாலும் பலத்தாலும் கைப்பற்றியிருந்த பலி சக்ரவர்த்தியிடம் வாமனராய் அவதரித்த பெருமாள் மூன்று அடி தானமாக கேட்டார். அவனும் சம்மதிக்க, பெருமாளோ ஒரு அடி பூலோகம், மற்றொரு அடி ப்ரம்ம லோகம் என அளந்துவிட்டு, ‘இன்னும் ஒரு அடி எங்கே?’ என கேட்டார். இதனால் பெருமானிடம் தன்னையே அடியாக சமர்ப்பித்தான் பலி சக்ரவர்த்தி.

அவ்வாறு திருவிக்ரம பெருமாள் உலகை தாண்டி தன் கால்களால் அளந்த பொழுது, ப்ரம்ம லோகத்தில் இருந்த ப்ரம்மா இவரது பாதங்களை தனது கமண்டலத்தில் உள்ள நீரால் கழுவினார் என புராணங்கள் சொல்கின்றன. அப்போது பெருமாள் தன் கணுக்காலில் சாற்றிக்கொண்டிருந்த நூபுரத்தில் பட்ட தீர்த்தமானது ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது. அதன் பின் அது சொர்க்கலோகம் வந்தபொழுது, அது மந்தாகினி என்று நங்கையாகியது என சில புராணங்கள் தெரிவிக்கின்றன.

பகீரதன் என்ற அரசன் தன் முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து நற்கதி அடைய பிரம்மாவிடம் வேண்டி கொண்டு சொர்கலோகம் சென்று மந்தாகினியை பூமிக்கு அழைத்துவந்தான். அந்த மந்தாகினிதான் இங்கு கங்கையாக ஓடிக்கொண்டு இருக்கிறாளாம். மந்தாகினியின் வேகத்தை கட்டுபடுத்த சிவபெருமான் அவளை தன் சிரசில் தாங்கினார். அப்படி பட்ட இந்த கங்கையானது அழகர்மலையில் நூபுர கங்கையாக, சிலம்பாராக ஒடிக்கொண்டு இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதற்கு வனகிரி, ரிஷபாத்ரி என்ற பெயர்களும் உண்டு.

சித்திரை திருவிழா

அழகர் மலை சிறப்புகள்...

விஸ்வகர்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் எமதர்ம ராஜா தவம் செய்துள்ளாராம். இதேபோல பெருமாள் சுந்தர பாகுவாக சேவை செய்த இடம் இதுதானாம்.

இங்கிருக்கும் 18 படி கருப்பண்ணசாமிக்கும்கூட ஒரு கதை உண்டு. அதன்படி கள்ளழகரின் சக்தியை குறைத்து அவரை தன் இருப்பிடம் கூட்டிச்செல்ல திட்டமிட்டு கருப்பண்ணசாமி தலைமையில் 18 பேர் அங்கு சென்றதாகவும், அப்போது வந்தவர்கள் இவரின் அழகில் மயங்கி 18 படிகளாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. கருப்பண்ணசாமி தலைமைக்காவலாக இங்கேயே அமர்ந்து விட்டார் என்று நம்பப்படுகிறது.

அழகருக்கு சுந்தரதோளுடையான், பரம ஸ்வாமி என்றும் பெயர்கள் உள்ளன. கையில் ஐந்து ஆயுதங்களைக் கொண்டவர் அழகர்.

அழகர் மலையிலேயே அழகருக்கென்று ஒரு தேர் இருக்கிறது. அதற்கு மாலை செய்யும் மணியாளர்கள், கோவிலின் வெளியிலேயே இருக்கிறார்கள்.

அழகருக்கான நைவேத்ய வரலாறு...

கிழக்கு மற்றும் தெற்கு ரத வீதி சந்திக்கும் இடத்தில் ஒரு மூதாட்டியின் வீடு இருந்தது. அந்த மூதாட்டி அழகரின் தீவிர பக்தை. அந்த மூதாட்டி அழகருக்கு ஏதாவது படைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் வீட்டில் மிதுக்க வத்தல், கொள்ளு, காரப்பயிறு தான் இருந்தனவாம். ‘சரி இதை அழகருக்கு நைவேத்யமாக படைக்கலாம்’ என்று நினைத்த அம்மூதாட்டி, நேரில் வர கூச்சம் கொண்டு மனதாலே படைத்தாராம்.

அழகர் மலைக்கு திருமாலிருஞ்சோலை என்றும் பெயர் உண்டு
அழகர் கோவில்

அன்று அழகர் தேரில் வீதி உலா வரும் சமயம், அத்தேரானது அந்த மூதாட்டி வீட்டின் வாயிலில் வந்து நின்று விட்டது. காரணம் தெரியாத மக்கள் யோசித்தபடி நிற்க... அப்பொழுது ஒரு அசரிரீ “எனது பக்தை ஒருவள், எனக்காக மிதுக்க வத்தல், கொள்ளு காரபயிரை வைத்திருக்கிறாள். எனக்கு அது வேண்டும்” என கூறவும், வியப்புற்ற மக்கள் மூதாட்டியின் பக்தியை எண்ணி வியந்தனராம். இந்த புராண கதையை மையமாக கொண்டு, சித்திரை திருவிழாவில் இன்றும்கூட ‘ஒரு நாள் நைவேத்தியமாக’ அழகருக்கு இவையாவும் படைக்கப்படுகின்றன.

ஆயிரம் பொன்சப்பரம் பெயர்க்காரணம்:

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் காலை குதிரை வாகனத்துடன் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருள்வார். பின்பு குதிரை வாகனத்துடன் வைகை ஆற்றில் இறங்குவார். இச்சப்பரமானது திருமலை நாயக்கர் காலத்தில் செய்யப்பட்டது. திருமலை நாயக்கர் கள்ளழகருக்கு 1000 பொன் வழங்கி சப்பரம் செய்ததால், இச்சப்பரம் இப்பெயர் ஏற்பட்டது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கு

அழகர் எந்த வண்ண வஸ்திரம் உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் வளம் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் விவசாயம் செழித்து நாட்டு மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள் என்பது நம்பிக்கையாகும். இந்த ஆண்டு கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.