ஹனுமனுக்கு பல அம்சங்கள் உண்டு. கலிகாலம் முடியும் வரை அவர் பூலோகத்தில் ராமநாமம் சொல்லிக்கொண்டு உயிருடன் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அதே போல் எங்கு ராம நாமம் சொல்லப்படுகிறதோ எங்கெல்லாம் ராமாயணம் வாசிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆகவேதான் ராமாயண கதை சொல்லப்படும் போது, அல்லது ராம நாமம் ஜபிக்கப்படும் போதும் அவர் அமருவதற்கென்று ஒரு மனையை ஒதுக்குவதுண்டு. இப்படி பட்ட அவதாரபுருஷனான ஹனுமனுக்கு ஒவ்வொரு ஸ்தலத்திலும் சிலவகை பெயர்கள் இருக்கும். அதன் பெருமை என்ன என்பதை தான் நாம் இங்கு காணப்போகிறோம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்
ஒருமுறை மயில் ராவணன் என்பவன் ராமருக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் பல மாயவேலைகளைச் செய்து வந்தான். யார் இந்த மயில் இராவணன்?
இராவணனுடைய தாயார் வழியில், இராவணனுக்கு ஒன்று விட்ட சகோதரன் தான் இந்த மயில்ராவணன். பாதாள இலங்கையின் அதிபதியான இவன், புத்திசாலி. மாயக் கலைகளில் தேர்ச்சிப்பெற்றவன். காளியிடம் பெற்ற வரத்தால், ஹனுமனையும் ஏமாற்றி, அவனுடைய பலத்த காவலில் இருந்த இராம, இலட்சுமணரைத் தந்திரமாகக் கடத்திச் சென்று, பாதாள இலங்கையில் சிறைவைத்து, அவர்களைக் காளிக்குப் பலியிட முயன்ற வேளையில், அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
”ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா. ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா. ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா. ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.”
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
நிருத்த ஆஞ்சநேயர் :
ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்த பொழுது ராமனுக்கு உதவிய ஹனுமன் போரிடுவது போல பாவனையோடும், எதிரிகளுக்கு பயத்தை ஏற்படக்கூடிய உக்கிர காட்சி கொடுக்கின்றார். இத்தகைய தோற்றத்தில் ஹனுமனை வணங்குபவர்களுக்கு எத்தகைய இடர்கள் இருந்தாலும் அவற்றை நொடியில் நீக்கி விடும் சக்திக்கொண்டவர்.
அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம்கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
கல்யாண ஆஞ்சநேயர் :
ராமர், ராவணப் போரில் லட்சுமணனை காப்பாற்றுவதற்காக அனுமன் சஞ்சீவி மலையை கையில் ஏந்திக் கொண்டு பறந்து வந்து சமயம், அவருடைய வியர்வைத்துளி சமுத்திரத்தில் விழுந்து அதை ஒரு மீன் வடிவில் இருந்த தேவகன்னி விழுங்கி விட்டதாக புராணாங்கள் கூறுகிறது. இதனால் அந்த தேவ கன்னிகைக்கு அழகிய மகன் ஒருவன் பிறந்தான். அவன் பெயர் மகரத்வஜன். சுவர்ச்சலா என்கிற அந்த தேவ கன்னிகையை பின்னர் ஹனுமன் மணந்ததாக புராணத்தில் ஒரு கதை உண்டு. தம்பதிகளாக வந்து இவர்களை வணங்கினால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம்
பால ஆஞ்சநேயர் :
அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்" என்று சொல்லப்படுகிறது. சிறு வயதில் தீரத்துடன் விளங்கிய ஹனுமன் சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதை பறிப்பதற்காக பறந்து சென்றார். அப்பொழுது சூரியபகவானே இவரை பார்த்து பயந்ததாக ஒரு அழகான சரித்திரம் உண்டு. இத்தகைய பால ஆஞ்சநேயரை வணங்கினால் புத்திசாலியான குழந்தை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
வீர ஆஞ்சநேயர் :
ஒரு முறை முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் ஹனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்திகளைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே 'வீர ஆஞ்சநேயர்" ஆகும்.
பக்த ஆஞ்சநேயர் :
தன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே 'பக்த ஆஞ்சநேயர்." ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். ஒருமுறை அவரது உள்ளத்தை ராமருக்கு கிழித்துக்காட்ட அதில் ராமபிரான் காட்சியளித்தார். அத்தகைய பக்தியை அனுமன் ராமரின்மேல் கொண்டிருந்தார். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது.
யோக ஆஞ்சநேயர் :
ராமாயணத்தின் முடிவில் ராமர் தன்னுடன் இருந்த அனைவரையும் வைகுண்டம் கூட்டிச்செல்ல.. ஹனுமன் இராமரின் மேல் இருந்த பக்தியால் பூலோகத்திலேயே தங்கி ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்தையே 'யோக ஆஞ்சநேயர்" என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால் கேட்டவை கிடைக்கும்.
மனோஜவம் மாருத துல்ய வேகம்ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்வாதாத்மஜம் வானரயூத முக்யம்ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி
சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர் :
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டுவர சென்ற அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால், சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர். அதனால் வருந்திய அனுமனின் வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார் ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் 'சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்."
சஞ்சீவி ஆஞ்சநேயர் :
ராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே 'சஞ்சீவி ஆஞ்சநேயர்" என்கிறோம்.