செய்தியாளர் - ரமேஷ் கண்ணன்
---------------
பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் முடிந்து தற்போது மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி வரை "வெர்ச்சுவல் க்யூ" முன்பதிவு முழுவதும் நிறைவடைந்தது. "மகரஜோதி" தரிசனம் மற்றும் "மகரசங்ரம பூஜை" தினமான ஜனவரி 15 ஆம் தேதி வரை முன்பதிவு ஏற்கனவே முடிவடைந்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதாக தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்களுக்கான "வெர்ச்சுவல் க்யூ" முன்பதிவு "மகர ஜோதி" தரிசனத்திற்குப் பின் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஜனவரி 10 முதல் "ஸ்பாட் புக்கிங்" வசதி முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே தினசரி 80 ஆயிரமாக இருந்த "வெர்ச்சுவல் க்யூ" முன்பதிவு ஜன 15 ஆம் தேதி "மகரஜோதி தரிசனத்தன்று 40 ஆயிரம் ஆகவும், மகரஜோதி தரிசனத்திற்கு முதல் நாள் ஜன.14 அன்று முன்பதிவு 50 ஆயிரமாக குறைத்தும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு முடியோடு 18 ஆம் படியேறும் பக்தர்களை மணிக்கு ஐந்தாயிரம் பேர் வீதம் கடத்திவிடும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் களைப்பு போக்க தேவஸ்வம் போர்டு சார்பில் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.