திருச்சூர் மாவட்டத்தில் பெருங்கொட்டுகரா என்ற கிராமத்தில் உள்ளது மிகப்பழமையான தேவஸ்தானமான ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில். இங்குள்ள விஷ்ணுமாயா, சிவபார்வதியின் குழந்தையாக கருதப்படுகிறார். இக்கோவிலில் தினமும் மதியம் 12 மணிக்கு விஷ்ணுமாயா நடனம் இருக்கும் என்றும், அச்சமயத்தில் விஷ்ணுமாயா கூறும் வாக்கு பலிக்கும் எனவும் கூறப்படுகிறது. இக்கோவிலை சுற்றி குருமாலி ஆறு ஓடுகிறது. தீர்க்கப்படாத பிரச்சனைகள் மற்றும் எதிரிகள் மற்றும் வேதனைகளுடன் போராடுபவர்கள், இக்கோவிலுக்கு வருகிறார்கள். இங்கு சாதி, மதம், நிறம் பார்க்கப்படுவதில்லை. எம்மதத்தினரும் இங்கு வரலாம்.
இக்கோவிலில் ஒரு விஷேஷ பூஜை உண்டு. அதன்படி இக்கோவிலில் இருக்கும் நம்பூதிரிகள் கடவுளின் உத்தரவின் பெயரில் வருடாவருடம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அப்பெண்ணிற்கு நாரிபூஜை என்ற பூஜை செய்வர். இது அதிர்ஷ்டம் உள்ளோருக்கே கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அத்தகைய அதிர்ஷ்டம் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு கிடைத்துள்ளது. ஆம்... கோவில் நிர்வாகம் இந்த வருடம் நாரி பூஜைக்கான பெண்ணாக குஷ்புவை தேர்ந்தெடுத்து அவருக்கு பூஜை செய்துள்ளது. இது குறித்து குஷ்புவே தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அதில் அவர்,
“கடவுளின் தெய்வீக ஆசீர்வாதம்!
திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோவிலில் நாரிபூஜை செய்ய அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதற்கு அழைக்கப்படுவார்கள். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். தினமும் பிரார்த்தனை செய்து, நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்பும் அனைவருக்கும், இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.. என் அன்புக்குரியவர்களும் உலகமும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்தித்தேன். உலகம், அமைதியான இடமாக இருக்கவும் பிரார்த்தனை செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.