bangaru adigalar file image
ஆன்மீகம்

பங்காரு அடிகளாரின் தரமான 5 சாதனைகள்!

யுவபுருஷ்

விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி பீடத்தினை மேல்மருவத்தூரில் கடந்த 1970ம் ஆண்டு நிறுவினார். கோயிலில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை கொண்டு வந்தார். குறிப்பாக மாதவிலக்கு நாட்களிலும் பெண்கள் தடையின்றி வழிபடலாம் என்று பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் பங்காரு அடிகளார். பட்டி தொட்டி எங்கும் இருக்கும் பக்தர்கள் சபரிமலைக்கும், பழனி கோவிலுக்கும் படையெடுத்து வந்த காலத்தில் பெண் பக்தர்களை மேல்மருவத்தூருக்கு படை எடுக்க வைத்தது பங்காரு அடிகளாரின் வழிபாட்டு முறை.

குறிசொல்ல தொடங்கி, பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார். இதன்மூலம் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பள்ளிகள் என்று ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புர கிராமங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டுவர பல ஆண்டு கால போராட்டம் தேவைப்பட்ட நிலையில், அப்போதே ஆதிபராசக்தி பீடத்தில் பெண்களே பூஜை செய்யும் முறையை கொண்டுவந்து சாதித்துக்காட்டினார் பங்காரு.

35 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல்மருத்தூரை பங்காரு சித்தர் பீடம் முன்னேற்றியிருப்பதை மறைப்பதற்கு இல்லை. தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் பக்தர்கள் பங்காருவை குருவாக ஏற்று வழிபடுகின்றனர். உயர்சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆன்மீகத்தில் கோலோச்சும் நிலையில், சாதாரண வகுப்பைச் சேர்ந்தவராக இருந்து ஆன்மீகத்தில் கோலோச்சியுள்ளார் பங்காரு அடிகளார்.

பிரதமர் முதல் மாநில முதல்வர் என அனைவரையும் தன்னை வந்து பார்த்து ஆசி பெறும் அளவுக்கு ஆன்மீகத்தில் பெரும் சக்தியாக விளங்கிய பங்காரு அடிகளாருக்கு, ஆன்மீக சேவையை பாராட்டி 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.