உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை நடத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் உயிருக்கு பயந்து இதுவரை 15 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, உக்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு தாய்நாடு அழைத்து வருகிறது. அந்த வகையில், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் அழைத்து இன்று உரையாடினார். அப்போது உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புடினிடம் மோடி விரிவாக எடுத்துரைத்தார். இதனை முழுமையாக கேட்டறிந்த புடின், இந்த நடவடிக்கைக்கு ரஷ்யப் படையினர் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என உறுதியளித்தார். அதேபோல, சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு ரஷ்ய ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் புடின் தெரிவித்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உரையாடலின்போது, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியிடம் போர் நிறுத்தம் தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தையை நடத்துமாறு ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை:
இதனிடையே, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 35 நிமிடங்கள் இந்த உரையாடல் நீடித்தது. அப்போது, போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக செலன்ஸ்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு உறுதுணையாக இருபபதற்காக பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் நன்றி தெரிவித்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.