ரஷ்யா - உக்ரைன்

‘நொடியில் எடுத்த முடிவு’ - ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்த உக்ரைன் ராணுவ வீரர் செய்த தியாகம்

‘நொடியில் எடுத்த முடிவு’ - ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்த உக்ரைன் ராணுவ வீரர் செய்த தியாகம்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் வருவதை தடுப்பதற்காக, அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி வீரமரணம் அடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனை நாலாப்புறமும் சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் இரவு - பகலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், க்ரீமியா வழியாக உக்ரைனுக்குள் நுழைய ரஷ்ய படையினர் பீரங்கிகளுடன் இன்று காலை வந்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்த தகவலறிந்ததும், அந்தப் பகுதிக்கு அங்கிருந்த உக்ரைன் ராணுவ வீரர் விளாடிமிரோவிச் உடனடியாக சென்றார். ரஷ்ய படைகள் உள்ளே வருவதை தடுக்க முடிவு செய்த அவர், தன்னிடம் இருந்த கண்ணி வெடிகளை அவர்கள் வரும் பாலத்தில் மறைத்து வைக்க முயற்சித்தார்.

ஆனால், அதற்குள்ளாக ரஷ்ய படையினர் அங்கு நெருங்கிவிட்டனர். இதனைக்கண்ட அவர், எது பற்றியும் யோசிக்காமல் அந்த பாலத்தில் படுத்து தன்னிடம் இருந்த அனைத்து கண்ணி வெடிகளையும் வெடிக்கச் செய்தார். இதில் அவரது உடலுடன் சேர்ந்து அந்த பாலமும் சுக்குநூறாக நொறுங்கியது.

விளாடிமிரோவிச்சின் இந்த தியாகத்தின் காரணமாக, ரஷ்ய படையினரால் உக்ரைனின் தெற்கு பகுதிக்குள் தரை மார்க்கமாக நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தாய் நாட்டை காப்பதற்காக தன் இன்னுயிரையும் துச்சமாக மதித்து விளாடிமிரோவிச் செய்த செயல், சக ராணுவ வீரர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.