தங்கள் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் புகார் அளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தரப்பில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள தங்களுக்கு உதவி செய்யுமாறு உக்ரைன் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும், ரஷ்யாவை நேரடியாக பகைத்துக் கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை. இதனால் ரஷ்ய படைகளை தனித்து நின்று எதிர்க்கும் நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா தங்கள் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் இன்று புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாடு தாக்கல் செய்துள்ள புகார் மனுவில், "உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, தனது படையெடுப்பை ரஷ்யா நியாயப்படுத்தி வருகிறது. உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் அத்துமீறல்களுக்கும், தாக்குதல்களுக்கும் ரஷ்யாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும். உக்ரைனில் இருக்கும் ரஷ்ய படைகளை உடனடியாக வெளியேற உத்தரவிட வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த மனு மீதான விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.