உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ராணுவத்துக்கு சொந்தமான எரிபொருள் கிடங்கை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்த ரஷ்ய ராணுவம் அங்கு ஒரு மாதக்காலத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்நகரம் மீது இரவு - பகலாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
இந்நிலையில்,கீவ் நகரம் அருகே ராணுவத்துக்கு சொந்தமான எரிபொருள் கிடங்கை ரஷ்யப் படைகள் இன்று ஏவுகணை வீசி தகர்த்துள்ளன. உக்ரைன் ராணுவத்துக்கு தேவையான எரிபொருளை வழங்கும் மிகப்பெரிய கிடங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.