ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஒளிர்ந்த நம்பிக்கை

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஒளிர்ந்த நம்பிக்கை

JustinDurai

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றவும், உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான சேவைகளை வழங்கவும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒன்பதாவது நாளாக போரிட்டு வருகிறது. கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றும் பட்சத்தில், கருங்கடலில் உக்ரைனின் ஆக்கிரமிப்பும், ராணுவத்தின் செயல்பாடுகளும் வெகுவாக குறுகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் நாட்களில் கார்கிவ் நகரத்தின் மீது தீவிரமான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் பெலாரஸில் ரஷ்யா, உக்ரைன் அதிகாரிகளிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உணவு மற்றும் மருந்துகளை வழங்குவது பற்றி பேசப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இருதரப்பும் இதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகரலாம் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கு மாகாணமான சுமி ஓபிளாஸ்ட் மீது ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இடைவெளி இல்லாமல் நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக, அங்குள்ள மக்கள் உடைமைகளை கூட எடுக்க நேரம் இல்லாமல், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், அங்குள்ள ஆக்திர்கா பகுதியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் தடை பட்டிருப்பதால், பெரும்பாலான இடங்களில் இருளில் மூழ்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"இனிதான் உக்ரைனுக்கு மோசமான காலக்கட்டம்" - பிரான்ஸ் அதிபரின் திடுக்கிடும் தகவல்