குழந்தைகளை அரவணைத்தபடி பாதுகாத்து தப்பியோடியதாக உக்ரைனிலிருந்து வெளியேறிய பெண்கள் கூறுகின்றனர்.
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் 18 முதல் 60 வயதுடைய ஆண்கள், ராணுவச் சட்டம் முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என சட்டம் அமலில் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அவர்களது பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் அந்நாட்டை விட்டு ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் அகதிகளாக போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து உக்ரேனிய பெண் ஒருவர் கூறுகையில், ''கீவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டு நாங்கள் தரையில் விழுந்தோம். அருகில் உள்ள தங்குமிடத்திற்கு விரைந்தபோது குழந்தைகளை எங்கள் உடலில் அரவணைத்து பாதுகாத்தோம். குழந்தைகள் பயத்தில் அழுகிறபோது, 'ஒன்றுமில்லை நமக்கு; நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்' என புன்சிரிப்புடன் அவர்களின் பயத்தை குறைத்தோம். எங்கள் வீட்டிற்கு வெளியே குண்டுகள் வெடித்தபோது, என் இளைய மகள் இரவு முழுவதும் அழுதாள். ஆனால் நான் சிரித்தேன், ஜோக்ஸ் சொன்னேன். அது எங்களை உயிரோடும் மன வலிமையோடும் இருப்பதற்கு உதவியது'' என்று கூறினார்.
கடந்த ஒரு வாரத்தில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் பேர் அகதிகளாக அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரஷ்யாவால் தாக்குதலுக்குள்ளான அணுமின் நிலையம்... இப்போது என்ன நிலவரம்? உக்ரைன் தகவல்!