6 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ள ரஷ்யா, கணிசமான துருப்புகளின் இழப்பினை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "நாங்கள் துருப்புக்களின் குறிப்பிடத்தக்க இழப்புகளைக் கொண்டுள்ளோம், இது எங்களுக்கு ஒரு பெரிய சோகம்"என தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் காரணமாக 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காயப்பட்டும் உள்ளனர். உக்ரைனின் நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம்,கனடா , ஜப்பான் உட்பட பல உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த சூழலில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ரஷ்யாவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யா மிகவும் கடினமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கூறியிருக்கிறார் . மேலும், ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் மீதான தாக்குதலில் தான் விரும்பிய அளவுக்கு விரைவாக முன்னேறவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டது.