ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன் நிலவரம் என்ன? அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

உக்ரைன் நிலவரம் என்ன? அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

Sinekadhara

உக்ரைன் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே ஒன்பது நாட்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை ’’ஆபரேஷன் கங்கா’’ திட்டத்தின் மூலமாக மத்திய அரசு தொடர்ச்சியாக மீட்டு இந்தியா அழைத்து வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக 6,200-க்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையின்போது பிரதமர் நரேந்திர மோடி உக்ரேனில் இருந்து இதுவரை எத்தனை இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அங்கு சிக்கி இந்தியர்களை மீட்க அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோன்று உக்ரைன் - ரஷ்யா இடையே தொடர்ச்சியாக போர் நீடித்துவரும் நிலையில் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஐந்து முறைக்கு மேலாக உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இன்று மற்றும் நாளைக்குள் 7,400 க்கும் அதிகமான இந்தியர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.