ரஷ்யா - உக்ரைன்

"இப்போது கைகளில் துப்பாக்கி.. அப்போது நடனம்" வைரலாகும் உக்ரைன் அதிபரின் வீடியோ

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி 16 ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் தாக்குதல், ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் மொத்த நாடும் ரஷ்ய படையிடம் வீழ்ந்துவிடும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி சற்றும் மனம் தளராமல் ரஷ்யாவின் எதிர்ப்பை சமாளித்து வருவது, சர்வதேச அளவில் அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, அவரை பத்திரமாக மீட்டு செல்ல அமெரிக்கா முன்வந்த போதும், அதனை செலன்ஸ்கி ஏற்க மறுத்து களத்தில் தானே இறங்கி போராடி வருவதை நாடு, இனம் கடந்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன்பு விளாடிமிர் செலன்ஸ்கி, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகராக இருந்த போது, அவர் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கோடிக்கணக்கானோரை ஈர்த்து வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'உக்ரைன் ஸ்டார் ஷோ'வில் செலன்ஸ்கி அறிமுகப் போட்டியாளராக நுழைந்து, பின்னர் தனது நடனத் திறமையால் அந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாகை சூடினார். அந்நிகழ்ச்சியில் செலன்ஸ்கி நடனமாடிய வீடியோ காட்சிகள் தான், தற்போது சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆகி வருகின்றன. மிக நுணுக்கமான நடன அசைவுகளை கூட, அனாயசமாக கையாளும் அவரது திறமையை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

"போர்க்களத்தில் ராணுவ வீரர் போல ஆயுதங்களை ஏந்தி நிற்கிறார்; யாருடைய துணை இல்லையென்றாலும், ரஷ்யாவுக்கு அஞ்ச மறுக்கிறார்; களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை தருகிறார்; தற்போது நடனமும் ஆடுகிறார். இந்த மனிதருக்குள் இன்னும் எத்தனை திறமைகள் இருக்கின்றன" என நெட்டீசன்கள் அதிபர் செலன்ஸ்கியை பாராட்டி வருகிறார்கள்.